புயல் மழை, நிலச்சரிவு பாதிப்பில் இருந்து மீளாத இலங்கை - பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது என்ன?
BBC Tamil December 07, 2025 07:48 PM
BBC

திட்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட மழையும் நிலச்சரிவுகளும் மிகப் பெரிய அளவில் பொருட்சேதங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இது குறித்த செய்தி சேகரிப்பிற்கான பயணங்களின்போது பிபிசி செய்தியாளர் நேரில் கண்டதென்ன?

இலங்கையை ஒட்டிய கடற்பகுதியில் உருவான திட்வா புயல், நம்பர் 27 - 28 தேதிகளில் அந்தத் தீவு நாட்டை உலுக்கி எடுத்தது. இலங்கையின் தெற்கு மாகாணம் தவிர நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இந்தக் கனமழை மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. மத்திய மலை நாட்டில் கண்டி, பதுளை, நுவரேலியா உள்ளிட்ட பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகள் மிகப் பெரிய அளவில் பொருட் சேதத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தின.

இலங்கை கடைசியாக 2016-ஆம் ஆண்டில்தான் இதுபோன்ற வெள்ளத்தையும் நிலச்சரிவையும் எதிர்கொண்டது. ஆனால், இந்த முறை சேதம் அந்த ஆண்டை விட மோசமாக இருந்தது.

காரணம், திட்வா புயலாக மாறுவதற்கு பல நாட்களுக்கு முன்பிருந்தே இலங்கை கன மழையை எதிர்கொண்டுவந்தது. நவம்பர் 21-ஆம் தேதி, மாத்தறை மாவட்டத்தில் உள்ள பெரலபனதர பகுதியில் சுமார் 180 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது. அந்த நாட்களில் தீவின் பிற பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த அதீத மழையால் இலங்கையின் பல முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் அசாதாரணமான அளவிற்கு உயர்ந்தது. மகாவலி நதி பெருக்கெடுத்ததால் பேராதனை ராயல் தாவரவியல் பூங்காவிற்குள் வெள்ள நீர் வந்தது. இதுதவிர, தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

BBC

அடுத்த சில நாட்களில் நாங்கள் கொழும்பு நகரைச் சென்றடைந்தபோது, நகரத்தின் நெடுஞ்சாலைகளில் திட்வா புயலின் தாக்கம் எதுவும் தென்படவில்லை. மழை நீர் தேங்கியிருந்த பகுதிகளிலும் வடிய ஆரம்பித்திருந்தது.

திட்வா புயலால் ஏற்பட்ட நிலச்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் கண்டிதான். தலைநகரிலிருந்து சுமார் 140 கி.மீ. தூரத்தில் இருக்கும் கண்டி, மத்திய மாகாணத்தின் முக்கிய நகரம். இலங்கையில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் நகரங்களில் கண்டியும் ஒன்று.

கொழும்பு நகரிலிருந்து கண்டி செல்லும் சாலைகளில் பெரிய பிரச்னை ஏதுமில்லை. ஆனால், எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் பரபரப்பாகக் காணப்படக் கூடிய நகரத் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பல உணவகங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு இருந்தது. பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர்கூட கிடைக்கவில்லை. சூப்பர் மார்க்கெட்களிலும் குடிநீர் பாட்டில்களுக்குத் தட்டுப்பாடு இருந்தது.

BBC

கண்டி நகருக்கு அருகில் உள்ள அரநாயக்க, ரஜதலாவ, ரம்புக் எல என பல பகுதிகள் நிலச்சரிவால் உயிரிழப்புகளையும் சந்தித்திருந்தன. முதலில் ரஜதலாவ பகுதிக்குச் சென்றபோது, கண்டியிலிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் சாலை நெடுக நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் சாலைகளில் விழுந்து கிடந்த மண் உடனுக்குடன் அகற்றப்பட்டிருந்தது. குறைந்தது ஒரு பக்கச் சாலையாவது போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டிருந்தது.

ரஜதலாவ பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. சாலைகள் பிளந்துகிடந்தன. அங்கிருந்த மக்கள் அருகில் இருந்த பௌத்த பன்சலைகளில் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தனர். நான்கைந்து நாட்கள் கழிந்த நிலையிலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டிருக்கவில்லை.

அதேபோல, ரம்புக் எல பகுதியில் குறைந்தது 14 வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டிருந்தன. ரம்புக் எல பகுதிக்குச் செல்லும் பாதை பல நாட்கள் வாகனங்களால் அணுக முடியாத நிலையில்தான் இருந்தது.

வியாழக்கிழமைவாக்கில் ஒரு வாகனம் செல்லும் அளவுக்கு சாலை சீரமைக்கப்பட்டது. இங்கும் பல உயிரிழப்புகள் இருந்தன. அரசின் உதவிகள் போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லையென்றும் சடலங்களை மீட்டெடுக்கக்கூட உதவிகள் கிடைக்கவில்லையென்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கடுத்த நாள், பேரிடர் மீட்புப் படையினர் இந்தப் பகுதியில் பல சடலங்களை மீட்டெடுத்த செய்திகள் ஊடகங்களில் வெளியாயின.

BBC

கண்டியிலிருந்து பண்டாரவளை செல்லும்போது பேராதனையைத் தாண்டியவுடன் வரும் சிறு நகரமான கெலிஓயாவை வெள்ளம் சூறையாடியிருந்தது. அருகிலிருந்த ஆற்றிலும் கால்வாயிலும் கன மழையின் காரணமாக நீர்மட்டம் உயர்ந்ததால் கெலிஓயா நகரின் பிரதான கடைத் தெரு வெள்ளத்தில் மூழ்கியது. நூற்றுக்கணக்கான கடைகள் இதில் சேதமடைந்து போயிருந்தன.

இதற்குப் பிறகு இந்தப் பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றொரு மாவட்டமான பதுளைக்கு புறப்பட்டோம். பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை நகருக்குச் செல்ல கண்டியிலிருந்து பல சாலைகள் உண்டு. ஆனால், பேரிடர் ஏற்பட்ட முதல் சில நாட்களில், கண்டியிலிருந்து எந்தச் சாலைகளாலும் பண்டாரவளை, பதுளை பகுதிகளை எளிதில் அணுக முடியாத நிலைதான் இருந்தது.

வெள்ளிக்கிழமையன்று நுவரேலியா, ஹோட்டன் சமவெளி வழியாகச் செல்லும் சாலையில், நிலச்சரிவால் ஏற்பட்ட சாலையில் ஏற்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டிருந்தன. இருந்தபோதும் சுமார் 140 கி.மீ. தூரத்தைக் கடக்க வழக்கமான நேரத்தைவிட பல மணி நேரம் கூடுதலாகத் தேவைப்பட்டது.

பண்டாரவளை நகரிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருக்கிறது கவரக்கெல பகுதி. இங்கும் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. பல வீடுகள் இதில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நிலச்சரிவின்போது வீடுகளில் சிக்கியவர்களை வெள்ள நீரிலும் சகதியிலும் இறங்கி மீட்டனர். இப்படி மீட்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடக்கம். உயிர் பிழைத்தவர்கள் நெகிழ்ச்சியுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

டிசம்பர் 9-ஆம் தேதி முதல் இலங்கையின் பல பகுதிகளில் பருவமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.