உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த மொஹ்சீன் என்ற இளைஞருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. மொஹ்சீனுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவரது திருமணத்திற்கு பிறகு, இரு சகோதரிகளின் திருமணங்களையும் ஒரே மேடையில் நடத்த குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
திருமண விழா சிறப்பாக முடிந்ததைத் தொடர்ந்து, மொஹ்சீனும் அவரது மணமகளும் முதலிரவு அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த அறையில் உள்ள மின்விளக்குகள் மிகுந்த வெளிச்சமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், “வெளிச்சம் குறைவான பல்பு மாற்றலாம்” என மனைவி கேட்டதாக தகவல்.
இதையடுத்து, வீட்டில் அத்தகைய பல்பு இல்லை என்றும் அருகிலுள்ள கடைக்கு சென்று வாங்கி வருவதாகவும் கூறி, மொஹ்சீன் வெளியே சென்றார். குடும்பத்தினர் சகோதரிகளின் மறுநாள் நடைபெற உள்ள திருமண ஏற்பாடுகளில் பிஸியாக இருந்ததால், மொஹ்சீன் திரும்ப வராததை கவனிக்கவில்லை. இரவு முழுவதும், மறுநாள் காலையிலும் அவர் வீடு திரும்பாததால் அனைவரும் பதட்டமடைந்தனர். இருப்பினும், திருமணத்தை நிறுத்த முடியாத சூழலில், இரு சகோதரிகளின் திருமணமும் மொஹ்சீன் இல்லாமலேயே நடத்தப்பட்டது.
பின்னர், மொஹ்சீன் காணாமல் போனது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு மொஹ்சீன் அரித்துவார் பகுதியில் இருப்பதாக, அவர் தானே உறவினருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சென்று அவரை மீட்டனர்.
போலீசாரிடம் மொஹ்சீன் கூறியதாவது: “திருமண நாளிலேயே முதலிரவு குறித்து எனக்கு மிகுந்த பதற்றம் ஏற்பட்டது. மனைவியுடன் அறைக்குள் சென்றபோது அந்த பதட்டம் அதிகரித்தது. என்ன செய்வது என்று தெரியாமல், மன அழுத்தத்தில் வீட்டை விட்டு ஓடிவிட்டேன்,” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, மொஹ்சீனை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம், மனநலத்திற்கு குடும்பங்களும் சமுதாயமும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவையை மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டியுள்ளது.