புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை (டிசம்பர் 9) தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். முன்னதாக, கட்சி சார்பில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், புதுச்சேரி அரசு அதற்கு அனுமதி மறுத்து, பொதுக்கூட்டம் நடத்த மட்டும் அனுமதி வழங்கியது. இதன்பிறகு பொதுக்கூட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பொதுக்கூட்டத்திற்குப் புதுச்சேரி அரசு பல முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியைச் சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி, மேலும் அவர்களுக்கு ‘கியூ-ஆர்’ கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பாஸ் வழங்கக் கூடாது என்பது இதில் மிக முக்கியமான நிபந்தனையாகும். அதுமட்டுமின்றி, முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கும் அனுமதி இல்லை. பொதுமக்களுக்குக் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளைக் கட்சி செய்ய வேண்டும்.
அத்துடன், பாதுகாப்புக்காக மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், தொண்டர்கள் பிரிந்து நிற்கத் தனித்தனித் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும், நாற்காலிகள் போடவோ, மேடை அமைக்கவோ அனுமதி இல்லை என்றும் புதுச்சேரி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளைத் த.வெ.க.வினர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.