கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 10-ம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமாகி, பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது, இன்ஸ்டாகிராமில் பீட்டர் என்ற பெயரில் அறிமுகமான ஒரு வாலிபர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று ஒரு விடுதியில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி, குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
பின்னர், தனது மோதிரம், கம்மல்களைப் பறித்துக்கொண்டு தன்னை அம்மாண்டிவிளையில் இறக்கிவிட்டுவிட்டு அந்த வாலிபர் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வீடு திரும்பியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போலியான ஆதார் எண் மற்றும் செல்போன் ஐ.எம்.இ. எண் உதவியுடன், அந்த போலி காதலன் கேரள மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டர் பினு (24) என்பதும், அவர் முதலில் ஏமாற்றிய சிறுமியுடன் தங்கியிருந்த வீட்டின் மூலம் மேலும் ஒரு சிறுமியுடன் தங்கியிருந்த அதிர்ச்சித் தகவலும் தெரியவந்தது.
போலீசார் விரைந்து செயல்பட்டு கேரளா சென்றபோது, கோட்டாரைச் சேர்ந்த மற்றொரு சிறுமியையும் போலி இன்ஸ்டாகிராம் காதல் மூலம் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து ஒரு விடுதியில் அடைத்து வைத்திருந்த பினுவைக் கண்டுபிடித்து சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், 10-க்கும் மேற்பட்ட போலியான இன்ஸ்டாகிராம் ஐடிகள் மூலம் பல சிறுமிகளை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பினுவை போக்சோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.