ஈரோட்டைத் தொடர்ந்து சேலம்: டிசம்பர் 30-ல் விஜய்யின் அடுத்த அதிரடிப் பரப்புரை?
Top Tamil News December 20, 2025 11:48 AM

தவெக பரப்புரையின் போது கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே நேற்று முன்தினம் (டிச.18) ஈரோட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது ஆளுங்கட்சியான திமுகவை தீயசக்தி என்று குறிப்பிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். அந்த பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வரும் நிலையில், அதற்குள் அடுத்தாக சேலத்தில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, கடந்த 4 ஆம் தேதி சேலத்தில் விஜய் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள், மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் கடந்த 3 ஆம் தேதி கார்த்திகை தீபம், 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என கூறி விஜய் பரப்புரைக் கூட்டத்திற்கு சேலம் மாநகர் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். வேறு தேதியை தேர்வு செய்யுமாறு கூறியிருந்த நிலையில், ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்புக் கூட்டம் வெற்றிகரமாக நேற்று நடந்து முடிந்திருக்கிறது.

எனவே, அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்தின் மற்றொரு மாவட்டமான சேலத்தில் இந்த மாதம் 30 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமலூர், இரும்பாலை ரோடு, சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒன்றில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், அதற்கான தேதி விரைவில் கட்சி தலைமையின் மூலம் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தவெக நிர்வாகிகள் கூறினர்.

தேதி இறுதி செய்யப்பட்டவுடன் முறைப்படி காவல் துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்க உள்ளதாகவும் சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.