சென்னை வானகரம் பகுதியில், பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானகரம் பகுதியைச் சேர்ந்த எபிபாத் (45) என்பவரின் மகன் சஷ்வத் (17). இவர், தாய் பணியாற்றி வரும் அதே தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயின்று வந்தார். எபிபாத்தின் மனைவி ராஜேஸ்வரி, அந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த குடும்பம் வானகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்தில் வசித்து வந்தது.
தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் தீவிரமாக படிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டில் சஷ்வத் நீண்ட நேரம் படித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ‘படித்தது போதும், தூங்கச் செல்லுங்கள்’ என பெற்றோர் அவரை அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து சிறிது நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்பகுதியில் ஒருவர் மாடியில் இருந்து விழுந்ததாக தகவல் பரவ, அங்குள்ள குடியிருப்பாளர்கள் அங்கு திரண்டனர். தகவலறிந்து கீழே சென்ற எபிபாத் மற்றும் ராஜேஸ்வரி, தங்கள் மகன் சஷ்வத் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சஷ்வத் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வானகரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவர், வீட்டின் பால்கனி வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்