தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகளின் போது SIR-க்காக வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பி வழங்கவில்லை என்றால், அல்லது முகவரி மாற்றம் செய்திருந்தும் அதனை முறையாக தெரிவிக்கவில்லை என்றால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். வீடுகளில் இல்லாத காரணத்தால் ஆவணங்களைப் பெறவோ நிரப்பவோ முடியாதவர்களின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என அவர் விளக்கினார்.
இருப்பினும், பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் 27.10.2025 தேதியிட்ட உத்தரவின் படி, வாக்காளர் பதிவு அலுவலர், பெறப்பட்ட அனைத்து கணக்கெடுப்பு படிவங்களையும் இணைத்து வரைவு வாக்காளர் பட்டியலை தயாரிப்பார். குறிப்பிட்ட காலத்திற்குள் கணக்கெடுப்பு படிவத்தை சமர்ப்பிக்க முடியாதவர்கள், படிவம் 6 மற்றும் அதனுடன் உறுதி மொழி இணைத்து, கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளுக்கான காலக்கெடுவிற்குள் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என நினைப்பவர்கள், ஜனவரி 18ஆம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம். முகவரி மாற்றம் செய்தவர்கள் படிவம் 8-ஐ, புதிய வாக்காளர்கள் படிவம் 6-ஐ தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பித்து, ஜனவரி 18க்குள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 24(a) பிரிவின் கீழ், வாக்காளர் பதிவு அலுவலரின் எந்த முடிவிற்கும் எதிராக மாவட்ட நடுவரிடம் முதல் மேல்முறையீடு செய்யலாம். அதனைத் தொடர்ந்து, 24(b) பிரிவின் கீழ் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இரண்டாம் மேல்முறையீடும் செய்ய முடியும். இந்த மேல்முறையீடுகள் 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள், விதி 27ன் படி மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
SIR என்பது தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, உண்மையான வாக்காளர்களை சேர்ப்பதற்காக காலங்காலமாக மேற்கொள்ளப்படும் ஒரு விரிவான சரிபார்ப்பு நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் இதற்கு முன் 2002–2004 ஆண்டுகளில் இந்தப் பணிகள் நடைபெற்றன. தற்போதைய இரண்டாம் கட்ட SIR பணிகள் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அதாவது பிஎல்.ஓக்கள், இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருத்தப் பணிகள் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளன.