அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பயங்கர விமான விபத்து ஒன்று நிகழ்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கால்வெஸ்டன் நகருக்கு அருகே, ஏழு பேரை ஏற்றிச் சென்ற மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து, டெக்சாஸ் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் தீவிர மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்தில் அவசர சேவை குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன.
மெக்சிகோ கடற்படை வெளியிட்ட தகவலின்படி, விமானத்தில் பயணம் செய்தவர்களில் நான்கு பேர் கடற்படை அதிகாரிகள், மற்றவர்கள் பொதுமக்கள் ஆவார்கள். அதில் ஒரு குழந்தையும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, விபத்து நடந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அடர்த்தியான மூடுபனி நிலவி வந்ததாக வானிலை ஆய்வாளர் கேமரூன் பாடிஸ்ட் தெரிவித்துள்ளார். குறைந்த காட்சித் தெளிவு இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.இந்த விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.