வகுப்பறைக்குள் புகுந்த ஆசிரியைக்கு அடி, உதை.. முன்னாள் மாணவர் வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!!
TV9 Tamil News December 25, 2025 05:48 PM

விருதுநகர், டிசம்பர் 25: அரசுப் பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்து முன்னாள் மாணவர் ஒருவர், ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வந்த ‘டிராகன்’ திரைப்படத்தில், கல்லூரி முதல்வர் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, படத்தின் ஹீரோ பெயரை குறிப்பிட்டு, இந்த மாணவர் மாதிரி மட்டும் ஆகிவிடக்கூடாது என அறிவுரை வழங்குவார். அதேபோல், விருதுநகரில் ஒரு ஆசிரியை தனது வகுப்பில் படித்த முன்னாள் மாணவன், பாதியில் படிப்பை நிறுத்தியதை குறிப்பிட்டு, அந்த மாணவர் மாதிரி மட்டும் ஆகிவிடக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். இது சம்மந்தப்பட்ட அந்த மாணவருக்கு தெரியவரவே, ஆத்திரத்தில் ஆசிரியையை சரமாரியாக தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்தும் இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: பாம்பை கடிக்க விட்டு தந்தையை கொன்ற கொடூர மகன்கள்.. அரசு வேலை, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மாஸ்டர் பிளான்..

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய ஆசிரியை:

விருதுநகர் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் அன்புச்செல்வி (36). ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தன் வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு, சில நாட்களுக்கு முன், ‘கடந்தாண்டு பிளஸ் 1 படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை போல இருக்கக் கூடாது’ என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தன்னை பற்றி ஆசிரியை வகுப்பறையில் பேசியதை அறிந்த அந்த முன்னாள் மாணவர், கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியைக்கு அடி, உதை:

இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் ஆசிரியை அன்புச்செல்வி, வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த அந்த முன்னாள் மாணவன், ஆசிரியரிடம் ஆபாச வார்த்தைகளில் பேசியுள்ளார். அதோடு, அவரை கடுமையாக அடித்து, உதைத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள், அந்த சிறுவனை பிடிக்க முயன்றபோதும், அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

17 வயது சிறுவன் கைது:

இதுகுறித்து ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். விசாரணையில், அந்த 17 வயது சிறுவன் இதே பள்ளியில் 11ம் வகுப்பு வரை படித்தவர் எனவும், படிப்பில் கவனம் செலுத்தாததால் ஆசிரியர் கண்டித்தது குறித்து அவர் ஆத்திரத்தில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் பள்ளியை விட்டு விட்டு தற்போது ஐடிஐ-யில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

இதையும் படிக்க:VIBE WITH MKS.. தமிழ்நாட்டின் இளம் வீரர்களுடன் கலகலப்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..

ஆத்திரத்தில் வெறிச்செயல்:

ஏற்கெனவே, ஆசிரியை மீது ஆத்திரத்தில் இருந்த அந்த சிறுவன், தன்னை பற்றி ஆசிரியை மற்ற மாணவர்களிடம் பேசியதை அறிந்ததும் மேலும் ஆத்திரமடைந்துள்ளார். இதனால், பழி வாங்கும் நோக்கத்துடன் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை மீது கடும் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட சிறுவன் மதுரை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். முன்னாள் மாணவன் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை மீது  தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.