சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் வசித்து வரும் சின்னத்திரை துணை நடிகை ஜெயலட்சுமியின் வீட்டில், சுமார் 7 சவரன் தங்க நகைகள் திருடுபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த நகைப்பெட்டியைச் சரிபார்த்தபோது, தங்கச் சங்கிலிகள் மற்றும் மோதிரங்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஜெயலட்சுமியின் நெருங்கிய தோழியான மோனிஷா என்பவர் நள்ளிரவில் நகைகளைத் திருடும் காட்சிகள் சிக்கி போலீஸாரையே அதிர வைத்தன.
கைது செய்யப்பட்ட மோனிஷாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சினிமா துறையில் பணியாற்றி வரும் மோனிஷா, தனது தோழி ஜெயலட்சுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சம்பவத்தன்று இரவு ஜெயலட்சுமியுடன் தங்கியிருந்த மோனிஷா, அவர் அசந்து தூங்கிய நேரத்தில் பீரோவைத் திறந்து 7 சவரன் நகைகளைத் திருடிப் பதுக்கி வைத்துள்ளார்.
மறுநாள் காலையில் எதுவும் தெரியாதது போலத் தோழியுடன் பேசிவிட்டு நகையுடன் எஸ்கேப் ஆகியுள்ளார். தற்போது மோனிஷாவை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த நகைகளைப் பறிமுதல் செய்து அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.