7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும் - பாஜக நயினார் கடும் கண்டனம்!
Seithipunal Tamil December 30, 2025 09:48 PM

பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில், "கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூரில் அதீத மதுபோதையில் இளைஞர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன.

அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தகப்பனாக இச்சம்பவத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. பாதிக்கப்பட்ட அக்குழந்தை முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கீழ் போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைக் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அவையனைத்திற்கும் பின்னணியில் போதையின் கரங்கள் தான் ஓங்கியிருக்கின்றன. ஆனால், “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என வீர வசனம் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இரும்புக்கரமோ இத்துப்போய்விட்டது. எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஒரு அவல ஆட்சியை நடத்திக் கொண்டு “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற விளம்பரப் பதாகைகளைத் தூக்கிப் பிடிக்க திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்.

மழலை மாறாத குழந்தையைச் சீரழித்த அக்கொடும் குற்றவாளியும், கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து ஆட்சி நடத்தும் திமுகவும் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


© Copyright @2025 LIDEA. All Rights Reserved.