2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. அதிமுக- பாஜக கூட்டணி ஏற்கனவே உறுதியான நிலையில் சமீபத்தில் பாமகவும் அந்த கூட்டணியில் இணைந்தது. அந்த கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த முறை எப்படி எப்படியாவது திமுகவை தோற்கடிக்க வேண்டுமென பழனிச்சாமி மற்றும் அமித்ஷா இருவருமே நினைக்கிறார்கள். எனவே அதற்கு ஏற்ப கூட்டணியை பலப்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது. அதனால் தேமுதிக, ஓபிஎஸ், டிடிவி போன்ற எல்லோரும் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கவேண்டும் என அமித்ஷா நினைக்கிறாராம்.
டிடிவி தினகரன் தனியாக அரசியல் கட்சி நடத்திருப்பதால் எடப்பாடிக்கு அதில் பிரச்சனை இல்லை
. ஆனால் ஓபிஎஸ்ஐ அவர் ஏற்பாரா என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில்தான், நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அப்போது பாஜக கூட்டணிக்கு 50 சீட் கொடுக்க வேண்டும் என அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறினராம். அந்த 50 சீட்களில் பாஜக மூலமாக கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். அதாவது டிடிவி தினகரனுக்கெல்லாம் பாஜகதான் எவ்வளவு தொகுதி என பிரித்துக்கொடுக்கும் என்கிறார்கள். அனேகமாக தேமுதிகவும் இந்த கூட்டணியில் இணையும் எனத்தெரிகிறது.
அதோடு இந்த முறை கூட்டணி ஆட்சி நடைபெற வேண்டும் எனவும் அமித்ஷா சொன்னதால் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்திருக்கிறார் பழனிச்சாமி என்கிறது டெல்லி வட்டாரம். தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை கூட்டணி ஆட்சி என்பது நடந்ததே இல்லை. ஆனால், அதிமுகவுக்கும் வேறு வழியில்லை என்கிறார்கள். மேலும், அமித்ஷா 50 தொகுதிகளை கேட்டாலும் 40 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.