படங்களில் காதல் காட்சி என்றால் கூட சூர்யா ஹீரோயினை தொடாமல் தான் நடித்திருப்பார் என அவரது அப்பாவும், பழம்பெரும் நடிகருமான சிவகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராக வலம் வருபவர் சிவகுமார். திரையுலக மார்க்கண்டேயன் என அனைவராலும் அழைக்கப்படுபவர். சிவகுமார் குடும்பத்தில் இருந்து அவரது மகன்களான சூர்யா, கார்த்தி, மருமகள் ஜோதிகா ஆகியோரும் இன்றளவும் முன்னணி பிரபலங்களாக திகழ்கின்றனர். 85 வயதிலும் மிகவும் ஆக்டிவாக இருந்தாலும் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் சிவகுமார், பல்வேறு திரையுலக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திரையுலக அனுபவங்களையும், சினிமா பிரபலங்களுடனான நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்.
இப்படியான நிலையில் இவர் ஒரு நேர்காணலில் அவர் நடிகை ராதிகாவுடன் பங்கேற்றார். அப்போது சிவகுமாரிடம், சூர்யா சினிமா வாழ்க்கை பற்றி பேசப்பட்டது. அதில் பேசிய அவர், “நான் ஒன்று சொல்கிறேன். தப்பா நினைக்க வேண்டாம். சூர்யா 25,30 படம் நடிச்சிருக்கார். கதாநாயகி மேலே படுத்து உருளும் காட்சியில் ஒருபோதும் நடித்திருக்கவே மாட்டார். அந்த அயோக்கியத்தனத்தை நான் தான் செய்துள்ளேன். எத்தனை கதாநாயகியுடன் அப்படி நடித்திருப்பேன் என்பது தெரியாது. ஆனால் சூர்யா காதல் காட்சி என்றால் கூட ஹீரோயினை தொடாமல் தான் நடித்திருப்பார். நான் அப்படித்தான் இருக்க வேண்டும் என சொன்னதில்லை.
சூர்யா முதல் படமான நேருக்கு நேர் படத்தில் டான்ஸ் ஆடியதைப் பார்த்து மறந்தும் கூட அவர் இனிமேல் டான்ஸ் ஆடக்கூடாது. அவ்வளவு கேவலமாக இருக்கிறது என பத்திரிக்கை ஒன்றில் விமர்சனம் எழுதியிருந்தார்கள். ஆனால் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம்பெற்ற ஓ செனோரியரிட்டா பாட்டைப் பார்த்து விட்டு அன்று சொன்னதை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தார்கள்.
சூர்யா ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு அது நனையும் அளவுக்கு வியர்வை வழிய வழிய 10 மணி நேரம் டான்ஸ் ஆடுவார். அதேபோல் எனக்கு தொப்பை போட்டுள்ளது. ஆனால் சூர்யா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். அவர் ஒரு வெறி பிடித்த ஆள் போல இருப்பார். பார்க்க சாதாரணமாகத்தான் இருப்பார். நினைப்பதை சாதிக்காமல் விட மாட்டார்” என சிவகுமார் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து, சூர்யா - ஜோதிகா காதல் பற்றி பேசிய சிவகுமார், நான் ஏராளமான ஹீரோயின்களுடன் காதல், திருமணம் போன்ற காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் என் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என சொல்லும்போது குறுக்கே நிற்க விரும்பவில்லை. பிரச்னை ஜோதிகா வீட்டு பக்கத்தில் இருந்து வந்தாலும், அது பேசி செட்டாகி விட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.