தமிழில் ‘கேம் ஆப் லோன்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை எஸ்தர் நோரானா, சினிமா துறையில் நிலவும் “Casting Couch” எனப்படும் பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து மிகக் காட்டமாகப் பேசியுள்ளார். “திறமையை மதிக்காமல் உடலையும், அழகையும் மட்டும் பார்த்து வாய்ப்பு கொடுக்கும் சில நபர்களால் ஒட்டுமொத்த சினிமாவின் தரமே கெட்டுப் போகிறது” என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். முந்தைய தலைமுறையில் இந்த நிலைமை மிக மோசமாக இருந்ததாகவும், தற்போதைய தலைமுறையினர் ஓரளவுக்குத் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, “வாய்ப்புக்காகப் பெண்களைப் படுக்கைக்கு அழைப்பவர்கள் எவ்வளவு தவறானவர்களோ, அதேபோல அந்த வாய்ப்பைப் பெறுவதற்காக அதற்கு உடன்படுபவர்களும் சமமான குற்றவாளிகள் தான்” என்று அவர் பொட்டில் அடித்தாற்போல தெரிவித்துள்ளார். நடிகை எஸ்தரின் இந்த நேர்மையான பேச்சு, சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், திரையுலகில் உள்ள சில கறுப்பு ஆடுகளையும் நடுங்க வைத்துள்ளது.