இன்று மாசி மகம்... தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
Dinamaalai March 02, 2026 12:48 PM

இன்று மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசு தேர்வுகள் உள்ளிட்டவை வழக்கம் போல் நடைபெறும். முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் கும்பமேளா என்று போற்றப்படும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நடைபெறும் மாசி மகத் திருவிழா உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி (மாசி 18) மாசி மகம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறை வங்கிகளுக்குப் பொருந்தாது. மேலும், மருத்துவமனைகள், தீயணைப்புத் துறை போன்ற அத்தியாவசியச் சேவைகள் வழக்கம் போல் செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மார்ச் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சைவ மற்றும் வைணவத் தலங்களில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு, மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.