வானில் தீப்பொறி போல ஒளிரும் நிலா – நாளை அபூர்வ காட்சி
TV9 Tamil News March 02, 2026 05:48 PM

2026 மார்ச் 3 நாளை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. நிலா சிவப்பு நிறத்தில் ஒளிரும் ‘பிளட் மூன்’ காட்சி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சந்திரனின் விளிம்பில் நீல நிற கோடு தென்படும் எனவும் ஓசோன் படலம் காரணமாக நிற மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மாலை 3.20 முதல் 6.47 மணி வரை காணலாம்.சில மாநிலங்களில் முழுமையாக, சில இடங்களில் பகுதி மட்டும் தெரியும்.

சந்திர கிரகணம் என்றால் என்ன?

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணம். இந்த ஆண்டிற்கான முழு சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. இந்த நிகழ்வின் போது, நிலா வழக்கத்தைவிட வேறுபட்ட நிறங்களில் காட்சியளிக்கும் என்பதால், வானியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நீல விளிம்புடன் சிவப்பு சந்திரன் – அறிவியல் விளக்கம்

முழு கிரகணத்தின் போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இதனால் நீல ஒளி சிதறுகிறது. சிவப்பு ஒளி மட்டும் சந்திரனை அடைகிறது. இதன் காரணமாக சந்திரன் அடர் ஆரஞ்ச் அல்லது சிவப்பு நிறத்தில் ஒளிரும். இதையே ‘பிளட் மூன்’ என்று அழைக்கிறார்கள். இந்த முறை, சந்திரன் பூமியின் ‘அம்பிரா’ நிழலின் மேல் விளிம்பைத் தொட்டு மெதுவாக உரசிச் செல்லும் என்பதால், அரிய நீல விளிம்பு தோன்றும்.

Also Read: மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளிப்படுத்தும் முத்தம்.. முத்த தினம் உருவானது எப்படி..?

ஓசோன் படலம் மற்றும் நிற மாற்றம்

சூரிய ஒளி பூமியின் உயர்ந்த வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தின் வழியாக செல்லும் போது, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் உறிஞ்சப்படும். இதனால் அடர் நீல நிறம் மட்டும் சந்திரனின் விளிம்பில் மெல்லிய கோடாக தோன்றும். இது சாதாரணமாக அரிதாக காணப்படும் நிகழ்வு என்பதால், இந்த சந்திர கிரகணம் சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது.

பார்க்கும் நேரம் மற்றும் இடங்கள்

இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். தெளிவாக காண தொலைநோக்கிகளை பயன்படுத்தலாம். அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயாவில் முழுமையாக காண முடியும். டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இறுதிப் பகுதி மட்டும் தெரியும். இந்திய நேரப்படி மாலை 3.20 முதல் மாலை 6.47 மணி வரை கிரகணம் நிகழும்.

மிஸ் பண்ணிடாதீங்க!

2026ம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் 2026 பிப்ரவரி 17ம் தேதி நிகழ்ந்தது. அது பகுதி நேர சூரிய கிரகணம். தற்போது, நாளை நிகழ உள்ள இந்த முழு சந்திர கிரகணம், நீல விளிம்புடன் சிவப்பு சந்திரனை காணும் அபூர்வ வாய்ப்பை தருகிறது. வானத்தை நோக்கி பார்ப்பவர்களுக்கு இது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.