திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்... விண்ணைப் பிளந்த 'அரோகரா' கோஷம் | மாசித் திருவிழா நிறைவு!
Dinamaalai March 02, 2026 08:48 PM

திருச்செந்தூரில், மாசித் திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. நான்கு ரத வீதிகளிலும் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா, கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று மார்ச் 2ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தேரோட்ட நிகழ்வில் முதலில் விநாயகர் தேர் ரத வீதிகளில் உலா வந்து நிலையை அடைந்தது. 

அதனைத் தொடர்ந்து, காலை 7.50 மணியளவில் சுவாமி தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. அரோகரா கோஷம் விண்ணதிர, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 11-ம் திருநாளான நாளை இரவு தெப்பத் திருவிழாவும், 12-ம் திருநாளான மார்ச் 4-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் மலர் கேடய சப்பர வீதியுலாவுடன் இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா நிறைவு பெறுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.