ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு, அந்நாட்டின் மிக சக்திவாய்ந்த ராணுவப் படையான IRGC (Islamic Revolutionary Guard Corps) தற்போது எவரது கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓமான் நாட்டின் துறைமுகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் ஈரானிய அரசுக்கும் தொடர்பில்லை என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
காமேனி உயிருடன் இருந்தபோது அவரிடம் மட்டுமே நேரடியாக உத்தரவுகளைப் பெற்று வந்த இந்தப் படை, தற்போது தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட “பொதுவான வழிகாட்டுதல்களின்” அடிப்படையில் தன்னிச்சையாகப் போரில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 2 லட்சம் வீரர்களைக் கொண்ட இந்தப் படை, ஈரானின் வழக்கமான ராணுவத்தை விட வலிமையானது மட்டுமல்லாமல், கட்டுமான நிறுவனங்கள் முதல் தொலைத்தொடர்பு வரை ஒரு மிகப்பெரிய பொருளாதார சாம்ராஜ்யத்தையும் தன் வசம் வைத்துள்ளது. இதனால், அடுத்த உச்ச தலைவர் தேர்வாவதற்குள் மத்திய கிழக்கில் ஒரு மிகப்பெரிய போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.