"அதிமுக போட்ட பிச்சை.." வைரல் வீடியோ - ஓபிஎஸ், பிரேமலதாவை விமர்சித்து விந்தியா ஆவேசம்!
Dinamaalai March 06, 2026 01:48 PM

சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், நட்சத்திரப் பேச்சாளருமான விந்தியா, ஓபிஎஸ் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

அதிமுக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விந்தியா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் கூட்டணி மாறியவர்கள் குறித்து அதிரடியான கருத்துகளை முன்வைத்துள்ளார். "ஒருவர் துரோகி என்று தெரிந்த பிறகு அவரை எப்படி மன்னிக்க முடியும்? கட்சியை அழிக்க நினைத்தவர்களுக்கும், இரட்டை இலை சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர்களுக்கும் அதிமுகவில் இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.


ஓபிஎஸ் தனது காரில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தையும், வீட்டின் கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தையும் நீக்கியதைச் சுட்டிக்காட்டிய விந்தியா, "இன்று அவர் அனுபவிக்கும் கார், வீடு மற்றும் செல்வாக்கு என அனைத்தும் ஜெயலலிதா அவர்களும் அதிமுகவும் போட்ட பிச்சை" என மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். எத்தனையோ பேர் வற்புறுத்தியும், துரோகிகளை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்ததாகவும், அவர்தான் உண்மையான தீர்க்கதரிசி என்றும் புகழ்ந்துள்ளார்.

திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக குறித்தும் விந்தியா தனது விமர்சனத்தை முன்வைத்தார்: "தேர்தல் நேரத்தில் மட்டும் ஊர் ஊராகக் கடை போடுபவர்கள் போல, ஒவ்வொரு கட்சியிடமும் பேரம் பேசுபவர் பிரேமலதா" என்று விமர்சித்துள்ளார். மிகக் குறைந்த வாக்கு சதவீதமே இல்லாத தேமுதிகவை, திமுக அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பது கேவலமானது. இதனால்தான் 2025-ல் அவர்களுக்கு எம்பி சீட் வழங்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தற்போது திமுக கூட்டணியில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், அவர்களை 'துரோகிகள்' என முத்திரை குத்தி அதிமுகவினர் பொதுவெளியில் விமர்சித்து வருவது தமிழக அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.