வெள்ளியங்கிரியில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு!
Top Tamil News March 10, 2026 08:48 AM

மேற்கு தொடர்ச்சி மலைகளின் தென்கைலாயம் என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலையேற பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்களுக்கு வனத் துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் அதிகளவிலான பக்தர்கள் மலையேறி சிவனை மனமுருகத் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம், கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த பொற்கொல்லர் ஹரிதாஸ் (வயது 48), சிவன் கோயிலுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் தனது நண்பர் மாரியப்பன் என்பவருடன் நேற்றிரவு 11.30 மணிக்கு வெள்ளியங்கிரி மலையேறத் தொடங்கினார்.

மலையேறத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹரிதாஸ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர், வனப் பணியாளர்கள் மற்றும் டோலி தூக்கும் சுமைப் பணியாளர்களுடன் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரை டோலி மூலம் அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவக் குழுவினர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர். இந்த நிகழ்வு சக பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆலாந்துறை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடப்பாண்டில் மட்டும் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தின் போது 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வனத் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளியங்கிரி மலை ஏறுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அனுப்பி வரும் நிலையிலும் இனி உடல் தகுதிச் சான்றுடன் வந்தால் மட்டுமே மலையேறுவதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வரும் நாட்களில் வெள்ளியங்கிரிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.