இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள நிலையில், அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விடுத்திருக்கும் கருத்துக்கள் விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரிக்கெட் என்பது ஒரு தனி நபர் சார்ந்த விளையாட்டு அல்ல, அது ஒரு கூட்டு முயற்சி என்று குறிப்பிட்டார். குறிப்பாக, “நாம் கோப்பைகளைத் தான் கொண்டாட வேண்டும், தனி நபர்களின் சாதனைகளை அல்ல” என்று அவர் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
இதனால் தனிப்பட்ட மைல்கற்களை விட அணியின் வெற்றியே முதன்மையானது என்பதை வலியுறுத்திய கம்பீர், இதற்கு உதாரணமாக சஞ்சு சாம்சனின் ஆட்டத்தைக் குறிப்பிட்டார். கடைசி மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் தனது தனிப்பட்ட சதத்தைப் பற்றி கவலைப்படாமல், அணியின் ரன் விகிதத்தை உயர்த்த அதிரடியாக விளையாடியதை அவர் பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நீண்டகாலமாக இருந்து வரும் ‘தனி நபர் வழிபாட்டு’ கலாச்சாரத்தை மாற்றி, குழு வெற்றிக்கான மனப்பக்குவத்தை வீரர்களிடமும் ரசிகர்களிடமும் உருவாக்குவதே கம்பீரின் இந்த கருத்தின் முக்கிய நோக்கமாகும்.