சிலிண்டர் தட்டுப்பாட்டால் 'எஸுமா' சட்டம் அதிரடி அமல்: தின்பண்டங்கள் விலை உயரும் அபாயம்?
Top Tamil News March 11, 2026 09:48 AM

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும், அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும், உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வது தடைபட்டுள்ளது.இதன் பாதிப்பு உலகம் முழுவதும் தென்பட தொடங்கியுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்திலும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.இந்தியாவிலும் இதன் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பெங்களூருவில் நேற்று முதல் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர், வணிக சிலிண்டர் வினியோகத்தை தடை செய்யக்கூடாது என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஹோட்டல்களுக்கான வினியோகம் தடைபட்ட நிலையில் இந்த கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான வீட்டுப்பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தடையின்றி காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்யுமாறு கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஸ்  சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பதுக்கலை தடுக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன்படி, சமையல் காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்கும் தற்போதைய புவிசார் அரசியல் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், உள்நாட்டு நுகர்வோர் மற்றும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியமான உள்நாட்டு சாராத் துறைகளுக்கு அதன் இருப்பை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்ற உள்நாட்டு சாராத் துறைகளிடமிருந்து வரும் கோரிக்கைகள், எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் செயல் இயக்குநர்களைக் கொண்ட ஒரு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் தகுதி, அவசியம் மற்றும் எரிபொருள் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். மற்ற துறைகளின் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை, bharatpetroleum.in, indianoil.in, lpg.sbu.hpcl.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


எல்.பி.ஜி தட்டுப்பாடு எதிரொலி; தின்பண்டங்கள் விலை ஏறுமா?


சர்வதேச போர் பதற்றத்தால் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உணவகங்கள் மூடும் அபாயம், தின்பண்டங்கள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துத் துறையில் ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 'எஸுமா' (ESMA) சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. சாதாரண நாட்களில் ஒரு ஹோட்டலுக்குத் தினசரி 1 முதல் 2 சிலிண்டர்கள் தேவைப்படும். விசேஷ ஆர்டர்கள் இருந்தால் 5 முதல் 7 சிலிண்டர்கள் வரை தேவைப்படும். தற்போது சிலிண்டர் கிடைக்காததால் பல ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பைப் பயன்படுத்த நினைத்தாலும், விறகின் விலை கிலோவிற்கு ரூ.5-லிருந்து ரூ.7-ஆக உயர்ந்துவிட்டது. மேலும், நகர்ப்புறங்களில் புகை காரணமாக விறகு அடுப்பு பயன்படுத்த அனுமதி கிடைப்பதில்லை.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.