தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கடலையூர், தென்காசி மாவட்டம் திருவேங்கடம், குருவிகுளம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரி மாவட்டம் காவேரிபட்டினம் ஆகிய இடங்களில் 400 இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், 90 சதவீதம் பெண் தொழிலாளர்களே தீப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மெழுகு
நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், தீப்பெட்டி தொழிலுக்கு மிகவும் முக்கிய மூலப்பொருளான மெழுகுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி விலையும் உயர்ந்துள்ளது. தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மெழுகு ஈரானில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நடந்து வரும் போர் காரணமாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால் மெழுகு வருவது நிறுத்தப்பட்டுள்ளது. போர் இன்னும் தொடர்ந்தால் மெழுகு கிடைக்காமல் போகும் நிலை ஏற்படுவது மட்டுமின்றி தீப்பெட்டி தொழில் முடங்குவதுடன் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர் ராஜு கூறுகையில், ”போர் காரணமாக ஈரானில் இருந்து வந்து கொண்டிருந்த மெழுகு முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
கையிருப்பில் உள்ள மெழுகுகளை உள்நாட்டு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். போருக்கு முன்பு ஒரு கிலோ மெழுகு ரூ.80 ஆக இருந்து நிலையில் தற்போது 130 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி தீப்பெட்டி பண்டல்களுக்கு தேவைப்படும் பிபி கவர், செலோ டெப் தயாரிக்க பயன்படும் வெர்ஜின் பெட்ரோலிய பொருளும் ஈரானில் இருந்து தான் வருகிறது. அதுவும் தடைபட்டுள்ளதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது.
போருக்கு முன்பு ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.180 வரை விற்பனையாகிறது. மெழுகு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. விலையேற்றம் காரணமாக ஒரு பண்டலுக்கு ரூ 10 முதல் ரூ. 20 உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் பொட்டாசியம் குளோரைடின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தீப்பெட்டி உற்பத்தி
ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தப்படும் சீன பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் அழிந்து கொண்டிருக்கும் நிலையில், போர் காரணமாக மெழுகும் தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக முடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும். வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி பண்டல் ஏற்றுமதி செய்வதும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.