கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பிரகாஷ் March 11, 2026 09:14 PM

கோவை நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் இலவச சட்ட உதவி மையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தீவிர சோதனை நடத்திய நிலையில், மிரட்டல் புரளி என பின்னர் உறுதி செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்த சம்பவங்கள் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

இந்த நிலையில், இன்று காலை சுமார் 11.45 மணியளவில் கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி பாதுகாப்பு மையத்திற்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த தகவல் உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு, மோப்பநாய் படை மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தின் அனைத்து அறைகளும், அலுவலக பகுதிகளும், அங்கு இருந்த ஆவணங்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது.

சோதனை நடைபெறும் நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு இருந்த பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் சில நேரம் வெளியே நிறுத்தப்பட்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில் எந்தவித வெடிகுண்டும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் இந்த மிரட்டல் புரளி என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இதுபோன்ற மிரட்டல் விடுக்கும் நபரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் புரளி என உறுதியான பிறகு நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலர்கள் நிம்மதி அடைந்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.