பிளாஸ்டிக் கழிவுகளால் பாழாய் போன பக்கிங்காம் கால்வாய்.. உள்ளூர் மக்கள் உதவியால் பளிச்சென மாறிய 3 கி.மீ நீளமுள்ள கால்வாய்..!
Webdunia Tamil March 19, 2026 12:48 PM

கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அருகே பிளாஸ்டிக் கழிவுகளால் தூர்ந்து போயிருந்த 3 கி.மீ நீளமுள்ள பக்கிங்காம் கால்வாய், மக்கள் பங்களிப்புடன் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டு தூய்மை பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

சுமார் 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தில், 600-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் இணைந்து 750 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளனர். தற்போது இந்தக் கால்வாய் கரைகளில் ரைசோபோரா மற்றும் அவிசென்னியா போன்ற வகைகளை சேர்ந்த 3,000 சதுப்புநில கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையின் ஒருங்கிணைந்த முயற்சியால், கால்வாயின் இயற்கையான நீர் ஓட்டம் சீரமைக்கப்பட்டு, கடல் நீர் உட்புகும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீட்புப் பணி, அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 50 இருளர் பழங்குடி மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இத்திட்டம், சீரழிந்த நீர்நிலைகளை மீட்டெடுப்பதில் ஒரு சிறந்த முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.