தேர்தல் நேரத்தில் ரூ.500 நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், ரூ.500 நோட்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியில் உண்மைத்தன்மை இல்லை. வதந்தியை நம்பாதீங்க.
ரிசர்வ் வங்கியோ அல்லது இந்தியத் தேர்தல் ஆணையமோ ரூ.500 நோட்டுகளை வங்கிகளில் பெறத் தடை விதித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரையில் வெளியிடவில்லை. ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமான பணமாகவே நீடிக்கின்றன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, வங்கிகளில் இருந்து வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான ரொக்கப் பணம் (குறிப்பாக ரூ.10 லட்சத்திற்கு மேல்) எடுக்கப்பட்டாலோ அல்லது டெபாசிட் செய்யப்பட்டாலோ, அது குறித்த விவரங்களை வருமான வரித்துறையினருக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறை.
ரூ.50,000-க்கு மேல்: உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால், தேர்தல் பறக்கும் படையினரால் அவை பறிமுதல் செய்யப்படும். ஒரு நபர் வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கம் எடுக்கும் போது, அந்தத் தகவல் தேர்தல் அதிகாரிகளுக்குப் பகிரப்படும். இது பணப்பட்டுவாடாவைத் தடுக்க எடுக்கப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே தவிர, பணம் எடுக்கத் தடை அல்ல.

ரூ.500 நோட்டுகள் மார்ச் 2026-க்குப் பிறகு செல்லாது அல்லது ஏடிஎம் இயந்திரங்களில் வராது எனப் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் சொந்தத் தேவைக்காக (திருமணம், மருத்துவம், தொழில்) ரூ.5 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்க வேண்டியிருந்தால், அதற்குரிய வங்கி ஆவணங்கள் அல்லது ஆதாரங்களை கைவசம் வைத்திருப்பது பாதுகாப்பானது.
ரூ.100, ரூ.200 நோட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்படுவது, சில்லறைப் பற்றாக்குறையைத் தவிர்க்க வங்கிகள் எடுக்கும் தற்காலிக நடவடிக்கையாக இருக்கலாம்.