1 கோடி வணிகர்களின் வாக்கு யாருக்கு தெரியுமா? - தெளிவுபடுத்திய விக்கிரமராஜா..!
எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை March 19, 2026 01:14 PM

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, வணிகர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் தேர்தல் கால கெடுபிடிகள் குறித்துச் செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசினார்.

திருவாரூர் எழுச்சி மாநாடு

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், "தமிழக வணிகர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக, வரும் மே மாதம் 5-ஆம் தேதி திருவாரூரில் 43-வது வணிகர் தின மாநில மாநாடு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை ஒரு விழிப்புணர்வு மற்றும் எழுச்சி மாநாடாக மாற்றும் நோக்கில், மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாகத் தீவிர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். வணிகர்களின் ஒற்றுமையை இந்த மாநாடு பறைசாற்றும்," என்றார்.

தேர்தல் அதிகாரிகள் கெடுபிடிக்குக் கண்டனம்

தற்போது தேர்தல் காலம் என்பதால் அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனைகள் குறித்து அவர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். "தேர்தல் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் சாதாரண வியாபாரிகளை வழிமறித்து வதைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாங்கள் ஒன்றும் அரசியல் கட்சியினரோ அல்லது ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களோ அல்ல. அன்றாட வியாபாரத்திற்காகப் பணம் கொண்டு செல்லும் எங்களை வழிமறித்து, குற்றவாளிகளைப் போல வீடியோ எடுப்பது போன்ற செயல்கள் வணிகர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர்கள் வணிகர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து, உரிய நடைமுறைகள் குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில், ஒட்டுமொத்த வணிகர்களையும் திரட்டிப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை," என எச்சரிக்கை விடுத்தார்.

சிறு வணிகர்களுக்குப் பேராபத்து

ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் குறித்துப் பேசிய அவர், "ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்களின் வியாபாரம் ஏற்கனவே 35 சதவீதம் பறிபோய்விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் சிறு வணிகர்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக 'வணிகர்கள் பாதுகாப்பு சட்டத்தை' கொண்டு வர வேண்டும்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முறையிட்டுள்ளோம். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் இது குறித்துப் பேசுவதாக அவர் உறுதியளித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் கோரிக்கைகளை ஏற்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் கட்சிக்கே தமிழகத்திலுள்ள ஒரு கோடி வணிகர்களின் வாக்குகள் அளிக்கப்படும்," என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

உணவுத் தொழில் மற்றும் காஸ் தட்டுப்பாடு

ஹோட்டல் தொழில் சந்திக்கும் சவால்கள் குறித்துக் குறிப்பிடுகையில், மத்திய அரசு காஸ் தட்டுப்பாட்டைப் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்றும், அப்போதுதான் ஹோட்டல் உரிமையாளர்கள் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் தரமான உணவை வழங்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழ் மொழிப் பற்று மற்றும் பாதுகாப்பு

வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் குறித்துப் பேசுகையில், "கடைகளின் பெயர் பலகையில் முதல் வரிசையில் தமிழ் மொழி கட்டாயம் இருக்க வேண்டும். இரண்டாவது வரிசையில் ஆங்கிலம் அல்லது பிற மொழிகள் இருக்கலாம். இது தொடர்பாகச் சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்," என்றார்.

மேலும், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள் தாக்கப்படுவது குறித்துக் கவலை தெரிவித்த அவர், "கஞ்சா மற்றும் போதை ஆசாமிகளிடமிருந்து வணிகர்களைக் காக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை," என வலியுறுத்தினார். இந்தச் சந்திப்பின் போது மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.