4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த BTS குழு; NETFLIX புதிய ஆல்பம் சாதனை; 34 நாடுகளில் 82 இசை நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டம்..!
Seithipunal Tamil March 22, 2026 05:48 AM

தென்கொரியாவை சேர்ந்த BTS குழு கடந்த 2013-ஆம் ஆண்டு 7 நபர்களுடன் தொடங்கிய இவர்களின் பயணம் தற்போது ஒரு பெரும் இசை சாம்ராஜ்யமாக விரிவடைந்துள்ளது. இவர்களுக்கு  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களும், இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர்.

 கடந்த 2013-ஆம் ஆண்டு, இவர்களின் '2 Cool 4 Skool' என்ற பெயரில் முதல் இசை ஆல்பம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.

அடுத்து, 2016-ஆம் ஆண்டு வெளியான Wings ஆல்பத்தில் இடம்பிடித்திருந்த Blood Sweat & Tears பாடல் உலகளவில் பிரபலமானது. தொடர்ந்து இவர்கள் வெளியிட்ட Dynamite, Butter, Life Goes On போன்ற பாடல்கள் உலகளவில் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதிலும் Butter பாடல் வெளியான 24 மணிநேரத்தில் 108.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்தது.

இந்த BTS குழுவினர் இதுவரை 25-க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை கைவசம் வைத்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான ஒரு கணக்கெடுப்பில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 08 லட்சம் சுற்றுலாப் பயணிகள் BTS குழுவினரைச் சந்திக்க வாய்ப்பிருக்கும் என்பதற்காகவே தென்கொரியாவிற்கு வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் 18 முதல் 28 வயதிற்குள் உள்ளவர்கள் குறைந்தது 18 முதல் 21 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயம். இதன் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து இவர்களில் ஒவ்வொருவராக ராணுவத்தில் இணைந்து பணியாற்றினர். இதனால் இவர்கள் புதிதாக எந்த ஆல்பமும் வெளியிடாமல் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 2025-ஆம் ஆண்டு இவர்களில் ராணுவ பனிக்காலம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து புதிய ஆல்பத்தை வெளியிடும் பணியில் இவர்கள் இறங்கினர். இவர்களின் அடுத்த ஆல்பம் எப்போது வெளியிடப்படும் என்ற உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்று BTS குழு தனது 14 பாடல்கள் கொண்ட 05-வது ஸ்டூடியோ ஆல்பமான ARIRANG-ஐ வெளியிட்டுள்ளது. இந்த ஆல்பம் வெளியான முதல் நாளிலேயே சுமார் 40 லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

தாங்கள் மீண்டும் இணைந்ததைக் கொண்டாடும் வகையில், தென்கொரியாவில் BTS குழு தனது முதல் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சி Netflix தளத்தில் உலகம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதனை 7.5 கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர். இது முந்தைய சாதனையான 'Tudum' நிகழ்வின் சாதனையை முறியடித்துள்ளது. இதன் மூலம் Netflix தளத்தில் தனிப்பட்ட இசை நிகழ்ச்சிக்கு வந்த அதிகபட்ச பார்வையாளர்கள் என்ற சாதனையை இந்த நிகழ்ச்சி பிடித்துள்ளது.

இது தவிர BTS குழு வரும் காலங்களில் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என மொத்தம் 34 நாடுகளில் 82 இசை நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள BTS ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.