LPG Cylinder விநியோகம் ; கூடுதலாக 20 விழுக்காடு வணிக சிலிண்டர்களை ஒதுக்கியுள்ள மத்திய அரசு..!
Seithipunal Tamil March 22, 2026 06:48 AM

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்தியாவில் எரிபொருள் LPG Cylinder விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழாய் வழி எரிவாயு திட்டத்தை எளிதாக்க மாநிலங்களுக்கு கூடுதலாக 20 விழுக்காடு வணிக சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், குழாய் வழி எரிவாயு திட்டத்தை எளிதாக்க மாநிலங்களுக்கு 30 விழுக்காடு வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 20 விழுக்காடு வணிக சிலிண்டர்களை ஒதுக்க மத்திய அரசு முன் வந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலர் நீரஜ் மிட்டல், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

''குழாய் வழி எரிவாயு திட்டத்தை எளிதாக்க மாநிலங்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் 20 விழுக்காடு கூடுதல் வணிக சிலிண்டர்கள் ஒதுக்கப்படும்.'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த கூடுதல் வணிக சிலிண்டர்களை ரெஸ்டாரன்டுகள், தாபாக்கள் மற்றும் உணவகங்கள், தொழில்துறை சார்ந்த உணவகங்கள், மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மானிய விலை உணவகங்களுக்கு விநியோகிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.