Flight Accident: போர் பதற்றம்..! 125 ராணுவ வீரர்களுடன் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - ஏராளமானோர் பலி
குலசேகரன் முனிரத்தினம் March 24, 2026 09:14 AM

Colombian Military Plane: கொலம்பியாவில் 125 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், குறைந்தபட்சம் 34 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ராணுவ விமானம்:

கொலம்பியா நாட்டின் தெற்கு எல்லையில், பெரு நாட்டிற்கு அருகே 125 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் சிறிது நேரத்திலேயே, கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும், “தெற்கு அமேசான் பகுதியில், பெரு நாட்டு எல்லையை ஒட்டியுள்ள புவேர்ட்டோ லெகுயிசாமோவிலிருந்து, லாக்ஹீட் மார்ட்டின் ஹெர்குலஸ் சி-130 ரக விமானம் புறப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்தது. உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையும், விபத்துக்கான காரணங்களும் இன்னும் கண்டறியப்படவில்லை. பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்றபோது அந்த விமானம் விபத்தில் சிக்கியது" என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

34 பேர் வரை பலி

நகர மையத்திலிருந்து வெறும் 3 கிலோ மீட்டர் தொலைவிலேயே இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் 110 ராணுவ வீரர்களும், 10 விமான பணியாளர்களும் உள்ளே இருந்தது தெரிய வந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், ஏராளமானோரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். காலை 6.30 மணி நிலவரப்படி, 34 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கொலம்பியா மாகாண நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காட்டுப்பகுதியில் விழுந்த விமானம், கொழுந்துவிட்டு எரிந்ததால் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

சி-130 ரக விமானம் விபத்து

முன்னதாக பிப்ரவரி மாத இறுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பொலிவிய விமானப்படைக்குச் சொந்தமான மற்றொரு ஹெர்குலஸ் சி-130 ரக விமானம், அதிக மக்கள்தொகை கொண்ட எல் ஆல்டோ நகரில் ஒரு குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, சுமார் 30 பேர் காயமடைந்தனர். மேலும், விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட பணக்கட்டுகள் நகரம் முழுவதும் சிதறிக் கிடந்தன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.