திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னை நிறுவனம் ரூ.1 கோடி நன்கொடை!
Dinamaalai March 26, 2026 11:48 PM

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் சமூக நலத் திட்டங்களுக்கு உதவும் வகையில், சென்னையைச் சேர்ந்த 'தி சென்னை ஷாப்பிங் மால்' நிறுவனம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிரணாதன அறக்கட்டளைக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை, 'தி சென்னை ஷாப்பிங் மால்' நிறுவனத்தின் தலைவர் மர்ரி வெங்கட ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் வழங்கினார்.

2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வெங்கடேஸ்வரா பிரணாதன அறக்கட்டளை, மிகவும் உன்னதமான நோக்கத்திற்காகச் செயல்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நோயாளிகளுக்கு உயர்தரமான இலவச மருத்துவ வசதிகளை இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது. இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விலையுயர்ந்த சிகிச்சைகள் இதன் மூலம் ஏழைகளுக்குக் கிடைக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை அறப்பணிகளுக்காக வழங்கியிருப்பது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.