தமிழ் சினிமாவில் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் திமுக கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போதே அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோன்று இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது குறித்து தனது சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"14 வயதில் திமுகவிற்கு வாக்கு சேகரித்தவன் நான். 25 ஆவது வயதில் கலைஞரின் எழுத்தில் கதாநாயகனாக நடித்து அவர் இதயத்தில் இடம் பிடித்தவன் நான். கலைஞருக்கு பிறகு தளபதியோடு நெருங்கி பழகியவன், அவரது ஆதரவோடு 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் தமிழகம் முழுவதும் பிரசாரம் சென்றவன் நான். 2021 ஆட்சிக்கு வந்த பிறகு கலைமாமணி தேர்வு குழு, சினிமா வாரியம் மற்றும் சின்னத்திரை தேர்வு குழுவில் இடம் பெற்றவன் நான்.
நான் முழுநேர அரசியல் களத்தில் பயணிப்பவன். திமுக தான் என் மூச்சு என் பேச்சு. ஒரு சீட்டு கிடைக்காததால் கட்சி மாறுபவனோ கொள்கை மாறுபவனோ நான் கிடையாது. நான் அதற்காக திமுகவில் இல்லை. தலைவரின் அன்பிற்கும், மக்கள் பணிக்கும் ரசிகன் நான். நான் திமுககாரன். என்னை தற்போது கழகத்திற்கு வந்தவர்களோடு ஒப்பிட்டு பேச வேண்டாம். மீண்டும் சொல்கிறேன் நான் திமிர் பிடித்த “திமுக”காரன்" என்று போஸ் வெங்கட் குறிப்பிட்டுள்ளார்.
இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் இருந்துகொண்டே தமிழக அரசியலிலும் தீவிரமாக செயலாற்றி வருகிறார். திமுகவின் கலை, இலக்கிய பிரிவின் துணைத் தலைவராக இருக்கும் போஸ் வெங்கட் அவ்வப்போது விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்.