tvk hq
2026 சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
திமுகவின் இரண்டு வலுவான தொகுதிகளில் விஜய் போட்டியிடுவதன் மூலம் அத்தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அறிமுகம் செய்துவைத்தார் விஜய். அப்போது, தான் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவது அவரது "நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக" கூறுகிறது திமுக.
ஆனால் விஜயின் இந்த முடிவு "வியூக அடிப்படையிலானது" என த.வெ.க. விளக்கம் அளிக்கிறது.
விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை குறிப்பிட்ட திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், விஜய் "தைரியமில்லாதவர்" என விமர்சித்தார். "பெரம்பூரை விட்டு விட்டு திருச்சி கிழக்கில் மட்டும் போட்டியிடத் தயாரா?" என அவர் விஜய்க்கு சவால் விடுத்தார்.
த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், "ஜெயலலிதா உட்பட எல்லா தலைவர்களும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார்கள்" என்று கூறினார்.
ஆனால் தற்போது, முதலமைச்சர் வேட்பாளர்களாக உள்ள மு.க.ஸ்டாலினோ எடப்பாடி பழனிசாமியோ இரு தொகுதிகளில் நிற்காததை மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.
"ஜெயலலிதா, ராகுல் காந்தி, மோதி போன்றோர் இரு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கின்றனர், ஆனால் அப்படி நிற்பவர்கள் நம்பிக்கையின்மை கொண்டவர்களாகவே நான் பார்க்கிறேன்." என்கிறார் குபேந்திரன்.
இதே கருத்தை வலியுறுத்துகிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமு மணிவண்ணன். "விஜய், தன்னைத் தானே மட்டுமே முன்னிறுத்தி தேர்தலில் களம் காண்கிறார். தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைப்பதை மட்டுமே அவர் முன்னிறுத்துகிறார்." என்கிறார்.
விமர்சனங்களுக்கு பதிலளித தவெகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ், "இது மிகவும் தீர்மானித்து எடுக்கப்பட்ட முடிவு. இரு தொகுதிகளும் திமுகவின் வலுவான தொகுதிகள் என்பதால் அங்கிருந்து போட்டியிட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது." என்கிறார்.
"எங்களின் அரசியல் எதிரியின் வலுவான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்." என்றும் ஃபெலிக்ஸ் கூறுகிறார்.
பெரம்பூர் தொகுதி ஏன்?சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றான பெரம்பூர் தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர்.
வியாசர்பாடி, மூலக்கடை, மகாகவி பாரதி நகர், முல்லை நகர், கொடுங்கையூர் என உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளும் இத்தொகுதிக்குள் வருகின்றன.
இந்த தொகுதியில் திமுக சார்பில் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஆர்.டி. சேகர் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
சென்னையின் மையமான தொகுதியாக பெரம்பூர் இருப்பதாகக் கூறும், தவெக செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ், "அங்கு விஜய் நிற்கும்போது ஓர் அலை ஏற்படும். அதனால் வாக்குகளை அதிகம் பெற்று திமுகவை தோற்கடிக்க முடியும்." என நம்புகிறார்.
தவெகவில் உறுப்பினராக சேர்வதற்கு உருவாக்கப்பட்ட செயலி மூலமாக இந்த தொகுதியில் அதிகமாக சுமார் 45,000 பேர் வரை அடிப்படை உறுப்பினர்களாக சேர்ந்ததாக தவெகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
திருச்சி கிழக்கு தொகுதியிலும் தற்போது திமுக எம்எல்ஏவாக உள்ள இனிகோ இருதயராஜ் வேட்பாளராக உள்ளார். அதிமுக சார்பில் கே ராஜசேகரன் போட்டியிடுகிறார். இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருச்சி கிழக்கு தொகுதியில் 2,17,397 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியும் நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதியாக உள்ளது. மேலும், குறிப்பிடத்தக்க அளவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதியாகவும் கருதப்படுகிறது.
2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெல்லமண்டி நடராஜன் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு வென்றார்.
"கரூரில் விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு அருகிலுள்ள திருச்சியிலிருந்து ஒரு தொகுதியை விஜய் தேர்ந்தெடுத்தது ஆச்சர்யமாக இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் அந்த தொகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்." என்கிறார் ராமு மணிவண்ணன்.
விஜய் சிறுபான்மையினர் என்பதை அடிப்படையாக வைத்து அரசியல் காயை நகர்த்திவருவதாக கூறுகிறார் ராமு மணிவண்ணன். "அதை அவருக்கு பின்னால் உள்ளவர்களும் பயன்படுத்துகின்றனர்." என்கிறார்.
ஆனால் மத சிறுபான்மை வாக்குகளை குறிவைத்து தொகுதிகளை தேர்ந்தெடுத்திருப்பதாக கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஃபெலிக்ஸ், "விஜயை சாதி, மத ரீதியாக அடையாளப்படுத்த முடியாது. அரசியலில் நுழைந்தவுடனே அவர் முதலில் செய்தது, அவரின் அம்மாவுக்காக சாய்பாபா கோவில் கட்டியதுதான்." என்கிறார்.
"தமிழ்நாட்டின் மையமாக விளங்கும் திருச்சி கிழக்கில் போட்டியிடுவதன் மூலம் டெல்டா பகுதிகளில் பெரும் தாக்கம் ஏற்பட்டு அப்பகுதிகளில் வெற்றிபெற முடியும்" என்றும் ஃபெலிக்ஸ் கூறுகிறார்.
சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் இருக்கும் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுகவுக்கே ஆதரவு கிடைக்கும் என அக்கட்சியின் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நம்பிக்கை தெரிவிக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "தேவாலயம் எப்போதும் அறிவாலயத்தை கைவிடாது" என்று கூறினார்.
BBC ராமு மணிவண்ணன் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட தலைவர்கள்
ஜெயலலிதா மீது தொடரப்பட்ட டான்சி முறைகேடு வழக்கில் 2000வது ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. அந்த வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த நிலையில் 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவே, முதலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய தொகுதிகளிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார் அவர்.
ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தும் அவர் இவ்வாறு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார். ஆனால், நான்கு மனுக்களையுமே தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம்.
முடிவில் ஜெயலலிதா போட்டியிடாமலேயே அந்தத் தேர்தலை எதிர்கொண்டது அ.தி.மு.க. இருந்தாலும் அ.தி.மு.க. கூட்டணி 197 இடங்களில் வெற்றிபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பதவி இழக்க நேரிட்டது.
2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார்.
அதேபோன்று, 2014 மக்களவை தேர்தலில் நரேந்திர மோதி வதோதரா, வாரணாசி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றார். பின்னர் வதோதரா தொகுதியை அவர் ராஜினாமா செய்தார்.
BBC
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு