கோவையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அண்ணாமலை பெயர் இருந்தும் அவர் வரவில்லை என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்காக பாலக்காடு செல்வதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து கோவை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு சென்றார்.
கோவை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஐ.ஜே.கே. நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், கோவையில் இருந்த அண்ணாமலை பிரதமரை வரவேற்கச் செல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதாவது, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியிலும் அண்ணாமலை போட்டியிட்டார். ஆனால், இந்தமுறை அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமரை வரவேற்க அண்ணாமலை செல்லாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆனால், பிரதமரை வரவேற்கும் நபர்களின் பட்டியலில் அண்ணாமலை பெயர் இருந்தும், அவர் தான் வரவில்லை என வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.