நாளை முதல் விஜய் தேர்தல் பரப்புரை; எந்த தொகுதிகளில் எப்போது பிரச்சாரம் மேற்கொள்கிறார்..?
Seithipunal Tamil March 30, 2026 06:48 AM

தமிழக சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை விஜய் இன்று அறிவித்தார்.

அதன்படி, தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 02 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய், நாளை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக தலைவர், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நாளை (30.03.2026, திங்கள்கிழமை) சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், அதன் பிறகு, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் பிரசாரத்திற்கான அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  இந்த பிரசாரங்களில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவரின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் பின்தொடர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அத்தோடு இந்தத் தேர்தல் பிரசாரங்களை, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்ட கழக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.'' எனத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.