மேற்காசிய போர் தாக்கம்!! 30% வரை டைல்ஸ் விலை உயரலாம்...
பிரகாஷ் March 31, 2026 02:44 PM

மேற்காசிய பகுதியில் உருவாகியுள்ள போர் பதற்றத்தின் தாக்கம் இந்திய தொழில்துறையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக எல்பிஜி (LPG) கேஸ் தட்டுப்பாடு காரணமாக டைல்ஸ் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை டைல்ஸ் டீலர்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.


தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

கோவையில் நடைபெற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் சுரபி பங்கஜ், மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன் விளைவாக டைல்ஸ் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான எல்பிஜி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

உற்பத்தி குறைவு மற்றும் மூலப்பொருட்களின் வரத்து தடையால், டைல்ஸ் தொழில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலை தொடர்ந்தால், டைல்ஸ் தொழிலில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது என்று சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும், சந்தையில் டைல்ஸ் கிடைப்பதில் குறைவு ஏற்படுவதால், விரைவில் விலையும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, டைல்ஸ் விலை சுமார் 30 சதவீதம் வரை உயரக்கூடும் என சங்கம் கணித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண அரசு தலையிட்டு எல்பிஜி விநியோகத்தை சீராக்க வேண்டும் என்றும், தொழில்துறையை பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.