'எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை'; இந்திய அரசு புதிய உத்தரவு..!
Seithipunal Tamil April 04, 2026 02:48 AM

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிரித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதால் பல்வேறு நாடுகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக ஆசியா நாடுகளில் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் இந்தியாவில் LPG சிலிண்டர்க்கு போர் தொடங்கிய சில நாட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இதன்காரணமாக முண்டியடித்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுக்களை வாங்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். 

இந்நிலையில், சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அது குறித்த வதந்திகளைத் தடுக்க மத்திய அரசு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் செயலாளர் நீரஜ் மிட்டல், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

LPG மற்றும் பெட்ரோல், டீசல் இருப்பு மற்றும் விலை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான செய்திகளால், பொதுமக்கள் தேவையற்ற பீதியடைந்து பொருட்களை முண்டியடித்து வாங்குவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது.

வதந்திகளை முறியடிக்கவும், பொதுமக்களுக்குச் சரியான தகவலைக் கொண்டு சேர்க்கவும் மாநில அரசுகள் தினசரி செய்தியாளர் சந்திப்புகளை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 17 மாநிலங்கள் மட்டுமே செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி வருகின்றன. அதன்படி, மற்ற மாநிலங்களும் உடனடியாக இச்செயல்பாட்டைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களைப் பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும், விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளைச் சீரமைக்க மத்திய அமைச்சகங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடிதத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.