நடிகராக இருந்து அரசியல் கட்சியை துவங்கியுள்ள விஜய் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய அரசியல் சக்தியாக பார்க்கப்படுகிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. விஜய் பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே பெரம்பூர் மற்றும் திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்தார். விரைவில் புதுச்சேரி செல்லவிருக்கிறார். அதன்பின் தமிழகத்தில் பல தொகுதிகளுக்கும் அவர் சென்று பிரச்சாரம் செய்யவிருக்கிறார். ஒருபக்கம் ஒவ்வொரு மேடையிலும் பேசும்போது ‘நான் உச்சத்தை விட்டுவிட்டு வந்தேன்.. எனக்கு ஓட்டு போடுங்கள்.. நிறைய வலிகளை கடந்து உங்கள் முன் நிற்கிறேன்’ என்றெல்லாம் பேசி அனுதாபத்தை பெற முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை வினோதினி வெளியிட்ட வீடியோவில் ‘அரசியலுக்கு புதிதாக வரும் சிலர் நான் சினிமாவை விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.. உச்சத்தில் இருந்தேன்.. உங்களுக்காக வந்திருக்கிறேன் என சொல்லுகிறார்கள்.. உங்களை யாரும் அப்படி விட்டுவிட்டு அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லவில்லை.. உங்களுக்கு அரசியல் பிடித்திருக்கிறது.. உங்களுக்கு ஒரு தேவை இருக்கிறது.. அதன் மூலம் உங்களுக்கு பதவியும் புகழும் வரும்., உங்களுக்கு ஆசை இருப்பதால்தான் வருகிறீர்கள்.. அப்படி இருக்கும் போது எதற்காக தியாகம் செய்துவிட்டு வந்தவர் போல பேசுகிறீர்கள்?..
அடுத்து, ‘எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்’ என சொல்கிறீர்கள்.. உங்களுக்கு அப்படி என்ன வலி? உடல் வலியா? மன வலியா? அப்படி யாரும் உங்களை கஷ்டப்பட்டு அரசியலுக்கு அழைக்கவில்லை. எதற்காக இப்படி மக்களை ஏமாற்றுகிறீர்கள்? எதற்காக இப்படி மக்களிடம் அனுதாபத்தை தேடி அரசியல் செய்கிறீர்கள்?..
முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்கள்..
மாற்றுத்திறனாளிகள், அனாதை இல்லங்களில் இருப்பவர்ககள் என நாட்டில் பல வலிகளை சந்தித்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை விடவா நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள்?.. பிரச்சனை இல்லாதவர்கள் இங்கே யார் இருக்கிறார்கள்?. சாலையில் பூ விற்கும் பெண்மணி கூட தினமும் பல பிரச்சனைகளை தாண்டித்தான் அதை செய்கிறார்.. அவர்கள் சந்திக்காத பிரச்சனையையா நீங்கள் சந்திக்கிறீர்கள்?.. நீங்கள் நினைத்தால் ஒன்று செய்ய முடிகிறது.. ஆனால் விருப்பப்பட்டதை செய்ய முடியாத மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஏன் எப்பொழுதும் நீங்கள் எதோ பாதிக்கப்பட்டவர் போலவும் எல்லாத்தையும் விட்டு விட்டு வந்தவர் போலவும் உங்களை மக்களிடம் உங்களை பிரஜெக்ட் செய்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.