ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்று, 6 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன், இந்தியாவிற்கு வர இருந்தது. ஆனால், அந்த கப்பல் தனது பாதையை சீனாவை நோக்கி மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த செய்தி குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
‘பிங் ஷூன்‘ என்ற கப்பல், அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஒரு கப்பலாக இருக்கும் நிலையில், அது 6 லட்சம் பீப்பாய் ஈரானிய கச்சா எண்ணெயுடன் இந்தியாவிற்கு வருவதாக இருந்தது. அதாவது, அந்த கப்பல் குஜராத்தின் வதினார் துறைமுகத்திற்கு இன்று வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், கப்பல் கண்காணிப்பு தரவு நிறுவனமான கெப்ளரின் அறிக்கையின்படி, அந்த கப்பல் தற்போது சீனாவின் டாங்யிங் துறைமுகத்தை நோக்கி செல்வதாக கூறப்பட்டது. அதற்கு காரணமாக, ஈரான் எண்ணெய் விற்பனையாளர்கள் பணத்தை முன்கூட்டியே செலுத்துமாறு நிபந்தனை விதித்ததுதான் என்று சொல்லப்பட்டது. இதனால், ஏற்கனவே தட்டுப்பாடு நிலவும் சூழலில், 6 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் போய்விட்டதா என்ற அதிர்ச்சி மக்களிடையே ஏற்பட்டது.
இந்த நிலையில், ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல் சீனாவிற்கு திருப்பி விடப்பட்டதாக வெளியான செய்தி தவறானது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அமைச்சகத்தின் பதிவில், பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இந்தியாவின் வதினார் துறைமுகத்திற்கு வர இருந்த ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல் சீனாவிற்கு திருப்பி விடப்பட்டதாக வரும் செய்திகளும், சமூக வலைதள பதிவுகளும் உண்மையில் தவறானவை என்று அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், இந்தியா 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாகவும், வர்த்தக காரணங்களின் அடிப்படையில், நிறுவனங்கள் வெவ்வேறு மூலங்களிலிருந்தும் புவியியல் பகுதிகளிலிருந்தும் எண்ணெயை பெறுவதற்கு முழுமையான நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, மத்திய கிழக்கு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களுக்கு மத்தியிலும், இந்திய சுத்திகரிப்பாளர்கள் ஈரான் உட்பட தங்களின் கச்சா எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும், மேலும், பரப்பப்படும் வதந்திகளுக்கு மாறாக, ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதில் எந்த தடையும் இல்லை. என்றும் கூறியுள்ளது. கப்பல் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுகள், எண்ணெய் வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை புறக்கணிக்கின்றன என்றும், வர்த்தக உகப்பாக்கம் மற்றும் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையின் அடிப்படையில், கடல்வழி சரக்குகள் பயணத்தின் நடுவிலேயே தங்கள் இடங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் மாதங்களுக்கு இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று மீண்டும் வலியுறுத்தப்படுவதாகவும், எல்பிஜி விஷயத்திலும் கூறப்படும் சில கூற்றுகள் தவறானவையே, ஏனெனில் சுமார் 44 டிஎம்டி ஈரானிய எல்பிஜியை ஏற்றிச் சென்ற 'சீ பேர்ட்' என்ற எல்பிஜி கப்பல் ஏப்ரல் 2-ம் தேதி அன்று இந்தியாவின் மங்களூரில் நங்கூரமிட்டு, தற்போது சரக்குகளை இறக்கிக் கொண்டிருக்கிறது என்றும் பெட்ரோலிய அமைச்சகம் தனது விளக்கத்தில் கூறியுள்ளது.
The news reports and social media posts of an Iranian crude cargo being diverted from Vadinar, India to China due to “payment issues” are factually incorrect. 🇮🇳India imports crude oil from 40+ countries, with companies having full flexibility to source oil from different sources…
— Ministry of Petroleum and Natural Gas #MoPNG (@PetroleumMin) April 4, 2026
மத்திய அரசின் இந்த விளக்கத்தால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.