நெல்லை டூ சாத்தூர்.. தொகுதி மாறியதன் பின்னணி.. பலிக்குமா நயினார் நாகேந்திரன் வியூகம்!
TV9 Tamil News April 10, 2026 12:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், அவ்வப்போது வேட்பாளர்கள் தொகுதி மாறி போட்டியிடுவது வழக்கமாகும். அந்த வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த முறை திருநெல்வேலி தொகுதியில் இருந்து சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த தொகுதியானது சாத்தூர் நகராட்சி முதல் ராஜபாளையம் முறம்பு வரை உள்ளது. இங்கு, தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 2016 சட்டமன்ற தேர்தலில் ஜி. எஸ். சுப்பிரமணியன். 2019 இடைத்தேர்தலில் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் ஆகிய தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 3 முறை வெற்றியை பதிவு செய்தனர்.

சமுதாய வாக்குகளை குறி வைத்து நயினார் போட்டி

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்த காரணத்தால், திமுக வேட்பாளரான மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் 62,995 வாக்குகள் பெற்றிருந்தார். திமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் ரகுராமன் 74,174 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன் அடிப்படையிலேயே, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பள்ளிகளுக்கு லீவு வந்தாச்சு! இனி கொண்டாட்டம் தான் – எப்போதிருந்து தெரியுமா?

நயினார் நாகேந்திரன் மீது அதிருப்தியா

திருநெல்வேலி தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவாக இருந்து வரும் நயினார் நாகேந்திரன் மீது தேவர் சமுதாயம் மற்றும் பிள்ளைமார் சமுதாயத்தினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில் அதிக அளவு இஸ்லாமியர்கள் வசித்து வருவதால், அவர்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் இந்த தொகுதி மாற்றத்தை நயினார் நாகேந்திரன் கையில் எடுத்ததாக தெரிகிறது. இந்த தொகுதியில், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் ஆர்.பி. உதயக்குமாரை எதிர்த்து களம் கண்டு தோல்வி அடைந்த கடற்கரை ராஜுக்கு திமுக மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

நயினார் வெற்றிக்கு பாஜகவினர் களமிறங்க வேண்டும்

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் கடற்கரை ராஜுவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எந்த அளவுக்கு வாக்குகளை பிரிக்கிறதோ அதன் அடிப்படையிலேயே வெற்றி தீர்மானிக்கப்படும் நிலை உள்ளது. இது ஒரு புறம் இருக்க, நயினார் நாகேந்திரன் வெற்றிக்கு பாஜகவினர் களத்தில் இறங்கி உழைத்தால் மட்டுமே வெற்றி கிட்டும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: காரைக்குடியில் இன்று விஜய் பரப்புரை.. 37 நிபந்தனைகள்.. மரங்களுக்கு இரும்புத் தகடு அமைத்து பாதுகாப்பு..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.