CBSE Exam Result Date: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எங்கு, எப்படி?
க.சே.ரமணி பிரபா தேவி April 11, 2026 06:44 PM

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிபிஎஸ்இ நிர்வாகத்தின் இணையதளத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. குறிப்பாக பிப்.17 இரு தேர்வுகளும் தொடங்கிய நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 11 வரையிலும் பிளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 10 வரையிலும் நடந்தன.  இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 43 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர். தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முடிவுகளை எங்கு காணலாம்?

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் சிபிஎஸ்இ-ன் இணையதளங்களான cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் results.cbse.nic.in ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம்.

5 வழிகள் என்னென்ன?

தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ஒரே சமயத்தில் பல லட்சம் பேர் இணையதளத்தைப் பயன்படுத்துவதால் சர்வர் முடங்க வாய்ப்புள்ளது. அதனால் இணையதளங்கள் தவிர்த்து வேறு 4 வழிகளிலும் தேர்வு முடிவுகளைக் காணலாம்.  

  • டிஜிலாக்கர் (DigiLocker) செயலி,
  • உமாங் (UMANG) செயலி
  • எஸ்எம்எஸ் (SMS)
  • ஐவிஆர்எஸ்  24300699 (டெல்லி), 011- 24300699 (பிற பகுதிகள்)

ஆகியவற்றின் வழியாகவும் முடிவுகளை அறிந்துகொள்ள மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

  1. முதலில் cbseresults.nic.in என்னும் அதிகாரப்பூர்வ சிபிஎஸ்இ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் புதிதாகத் தோன்றும் CBSE Class 10 Board Exam Results அல்லது CBSE Class 12 Board Exam Results என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
  3. இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில், மாணவரின் தேர்வுப் பதிவு எண் (Roll Number), பள்ளியின் எண் (School Number), அட்மிட் கார்டு ஐடி (Admit Card ID) மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைச் சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.
  4. அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின் 'Submit' பட்டனை அழுத்தினால், உங்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும்.
  5. எதிர்காலத் தேவைக்காக அந்த மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய cbse10 <roll number> <school number> <centre number> என்று டைப் செய்து, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய cbse12 <roll number> <school number> <centre number> என்று டைப் செய்து, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இரு வகுப்பு தேர்வு முடிவுகளும் மே 13ஆம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.