சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்று சொல்வார்கள். அது போல், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவதற்காக ஈரான் வைத்த கண்ணிவெடிகள், தற்போது அந்நாட்டிற்கே பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, போர்நிறுத்தத்திற்காக ஒப்புக்கொண்டபடி, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் ஈரானுக்கு பிரச்னை எழுந்துள்ளது. அது எதனால் என்பதை இப்போது பார்க்கலாம்.
அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்ததையடுத்து, அந்நாடும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. ஈரானால் அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாததால், அந்நட்டிற்கு உதவும் அண்டை நாடுகளான வளைகுடாவில் உள்ள அரபு நாடுகளின் பகுதிகள் மீது, அதாவது கத்தார், குவைத், துபாய், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
அது போதாதென்று, உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் கடல் நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. அப்பகுதி வழியாக செல்லும் எதிரி நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது. இதனால் ஏற்பட்ட பயத்தில், அவ்வழியாக எந்த கப்பலும் செல்லாததால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது.
இந்த பிரச்னை அமெரிக்காவிலும் எதிரொலிக்கத் தொங்கியதை அடுத்து, கடும் கோபமடைந்த ட்ரம்ப், ஹார்முஸை திறக்குமாறு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் ஈரான் அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, தங்களுடன் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க வருமாறு இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால், எல்லோரும் ட்ரம்ப்பின் அழைப்பை நிராகரித்துவிட்டனர். அதைத் தொடர்ந்து, ஹார்முஸ் வழியாக வரும் கப்பல்களுக்கு அமெரிக்க போர்க்கப்பல்களே பாதுகாப்பு கொடுக்கும் என்று கூறினார் ட்ரம்ப். அதை தடுத்தால், ஈரான் மீது இதுவரை கண்டிராத அளவுக்கு தாக்குதல் நடத்தப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையை அடுத்து, ஈரான் ஹார்முஸ் வழித்தடத்தில் கண்ணி வெடிகளை வைத்தது. அதனால், ட்ரம்ப் கூறியபடி அவ்வழியாக கப்பல் போக்குவரத்தை தொடங்குவது பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், ஈரான் முழுமையாக அழிக்கப்படும், அதாவது ஒரு நாகரிகமே அழிக்கப்படும் என்ற அளவிற்கு மிரட்டல் விடுத்து, ட்ரம்ப் கெடு விதித்தார்.
அதைத் தொடர்ந்து, இறுதி கெடு முடிவடைய 10 மணி நேரங்கள் இருந்த நிலையில், பாகிஸ்தான், எகிப்து, துருக்கி நாடுகள் இணைந்து கடைசி நேர பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 2 வார கால போர்நிறுத்தத்தை ட்ரம்ப் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படும் என இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஈரானும் ஹார்முஸை திறந்த நிலையில், இஸ்ரேல் லெபனான் மீது ஒரு பெரிய தாக்கதலை நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.
மேலும், அவ்வழியாக செல்ல வேண்டிய கப்பல்களுக்கான மாற்றுப்பாதையை அறிவித்தது. அது எதனால் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது, போரின் போது நீர்வழிப்பாதையை தடுப்பதற்காக ஈரான் பதித்த கண்ணிவெடிகள் அனைத்தையும் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரான் சிறிய படகுகளை பயன்படுத்தி கண்ணிவெடிகளை புதைத்திருந்தது. இருப்பினும், கண்ணிவெடிகள் வைக்கப்பட்டதை ஈரான் பதிவு செய்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
மேலும், அந்த அறிக்கையின்படி, ஈரானால் பதிவுசெய்யப்பட்ட சில கண்ணிவெடிகள், அவை நகர்ந்து செல்லக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருந்ததால், அவற்றை கண்டறிவது கடினமாக இருந்தது. ஈரானிய அதிகாரிகள் ஜலசந்தியில் "முறைதவறி" கண்ணிவெடிகளைப் புதைத்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது, ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க மாற்றுப் பாதையை அறிவித்துள்ள ஈரான், கண்ணிவெடிகளை எப்படி அகற்றி, அந்த விழியில் முழு கப்பல் போக்குவரத்தை தொடங்கும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.