“டாஸ்மாக் மதுவுக்கு ஏசி கிடங்கு.. நெல்லு சேமிக்க இடம் கிடையாதா?” - சீமான் சராமரி கேள்வி!
Dinamaalai April 13, 2026 09:48 AM

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் மதுக் கொள்கை மற்றும் கல்வி, மருத்துவக் கட்டமைப்பு குறித்து ஆவேசமாக உரையாற்றினார்.

தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்கக் கோரி நீண்ட காலப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது குறித்து சீமான் கேள்வி எழுப்பினார். "தமிழகத்தில் பனை மற்றும் தென்னையிலிருந்து கள் இறக்க ஏன் அனுமதி இல்லை? இயற்கையான பானமான கள் அனுமதிக்கப்பட்டால், டாஸ்மாக் விற்பனை சரிந்துவிடும் என்பதுதான் உண்மையான காரணமா?" என அவர் வினவினார்.

விவசாயிகளின் விளைபொருளான நெல்லைச் சேமிக்கக் கிடங்குகள் இல்லாத நிலையில், மதுபாட்டில்களைப் பாதுகாக்க மட்டும் குளிரூட்டப்பட்ட கிடங்குகளை அரசு வைத்திருப்பதாகச் சாடினார்.

தமிழகத்தின் தற்போதைய கல்வி மற்றும் மருத்துவச் சூழல் குறித்துப் பேசுகையில், "இங்குள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் எப்படியிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற முன்னாள் முதல்வர்களே அங்குச் சிகிச்சை பெற முன்வரவில்லை என்பதுதான்."

கல்வி என்பது சேவையாக இல்லாமல் ஒரு பெரும் வியாபாரமாக மாற்றப்பட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். வாக்காளர்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோளில்,  "தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்தை விட தமிழர்களின் மானமே பெரிது. உண்மையான மாற்றத்தை விரும்பும் மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க 'விவசாயி' சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.