Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
பேச்சி ஆவுடையப்பன் April 15, 2026 09:14 PM

2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் நடிகர் அர்ஜூன் தாஸ் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

அதில், சென்னை மங்களப்புரத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் காரை தேர்தல் பறக்கும்படையினர் சோதனை செய்ததில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையின்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது என செய்தி பின்னணியில் ஒலிக்கிறது. 

பறக்கும்படை குழுவினர் இது தேர்தல் நேரம் என்பதால் சாதாரண செக்கிங் தான் என சொல்ல, எங்களுடன் ஒத்துழைப்பு கொடுங்கள் என கூறுகிறார்கள். அதற்கு அர்ஜூன் தாஸ் வீடு பக்கம் தான் உள்ளது. ஹோட்டலில் சாப்பிட செல்கிறோம் என கூறுகிறார். பின்னர் காரினுள் சோதனை செய்யப்படுகிறது. கார் டிக்கியை ஓபன் செய்தால் அங்கு நிறைய பைகளில் ஏகப்பட்ட பணம் இருப்பதைக் கண்டு பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைகின்றனர். உடனடியாக காரில் இருக்கும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நிலைமையை விவரிக்க முயற்சிக்கிறார். 

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். முதலமைச்சரே வந்தாலும் செக் பண்ணி விட்டு தான் அனுப்புவோம் என போலீசார் தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

தொடர்ந்து அந்த வீடியோவில் பேசும் அர்ஜூன் தாஸ், இது உண்மையான பணம் கிடையாது. கான்சிட்டி படத்தில் உபயோகப்படுத்திய டம்மி பணம் தான். தேர்தல் நேரத்தில் உங்கள் வண்டியை சோதனை செய்வார்கள். அவர்களுடன் ஒத்துழைப்பு வழங்குங்கள். அதேபோல் ரூ.50 ஆயிரம் மேல் பணம் எடுத்துச் செல்லாதீர்கள். இதனால் நிறைய பிரச்னை வரும். போலீசுக்கு, உங்களுக்கும் இடையூறாக இருக்கும். அதேபோல் வரும் 23ம் தேதி ஓட்டு போடுங்கள். 

நாங்கள் கான்சிட்டி படத்துக்கு ப்ரோமோ வீடியோ ஷூட் பண்ண நினைத்தோம். படத்தின் இயக்குநர் ஹரிஷ் தான் விழிப்புணர்வு வீடியோவாக பயன்படுத்தலாம் என சொன்னார். அதனால் இந்த வீடியோவை வெளியிட்டோம். நாளை இப்படத்தின் முதல் பாடலான கொரியன் பேமிலி வெளியாகிறது என தெரிவிக்கிறார். 

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள கான் சிட்டி படத்தில் ஹீரோயினாக அன்னாபென் நடிக்கிறார். மேலும் வடிவுக்கரசி, யோகிபாபு போன்றோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இந்த படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கானது சென்னை, மங்களூரு மற்றும் மும்பையில் நடைபெற்றது. விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.