TVK Vijay: அரசியல் அறிவே இல்லாதவர் விஜய்.. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடும் விமர்சனம்!
பேச்சி ஆவுடையப்பன் April 15, 2026 09:44 PM

கேரவனுள் கூட்டுப்புழுவாக வாழ்ந்த ஒருவர் திடீரென முதல்வராக ஆசைப்படுவது அவரின் விருப்பமாக இருந்தாலும், வாக்காளர்கள் யோசிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜயை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஒரு நேர்காணலில் பேசிய அவர், “தமிழகத்தையும், தமிழ் சமூகத்தையும், இந்த தலைமுறையையும், அரசியலையும் கெடுக்க வந்திருக்கும் ஒரு கருவியாக தான் தமிழக வெற்றிக் கழகத்தையும், அக்கட்சி தலைவர் விஜயையும் பார்க்கிறேன். இதுவரை தமிழக அரசியல் இவ்வளவு அவமானப்பட்டதில்லை, களங்கப்பட்டதில்லை, குழப்பம் ஏற்பட்டதில்லை. அரசியல் சிந்தாந்ததம் மூலம் தான் பொதுமக்களுக்கு தீர்வு கிடைக்கும். அதை வைத்து தான் மக்கள் வாய்ப்பு வழங்கினார்கள். 

எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா இவர்கள் எல்லாரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என சொல்வார்கள். லெஜண்ட் சரவணன் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். அவரிடம் பணம் இருப்பதால் நடிக்கும் ஆசையை தீர்த்துக் கொண்டார். உதயநிதி நடிகர் தான் என்றாலும் 70 ஆண்டுகள் பழமையான கட்சியைச் சேர்ந்த கருணாநிதியின் பேரன் என்று தான் அறிமுகமானார். இன்றைய முதலமைச்சரின் மகன். அவரின் குடும்பமே அரசியல் பின்புலம் கொண்டது. அந்த வீட்டிக்குள் என்ன மாதிரியான அரசியல் பேச்சு ஓடும் என்பதை யோசித்து பாருங்கள். 

அப்படி பார்த்தால் விஜய் வீட்டுக்குள் திரைப்படம் தான் இருக்கும். அங்கு அரசியல் பேச்சு இருக்காது. அரசியல் அறிவே இல்லாத நடிகரான விஜய் அதற்குள் வந்தது மிகப்பெரிய தவறாகும். எல்லாருக்கும் இருப்பது போல விஜய்க்கும் இருக்கலாம். ஆனால் வாக்காளர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். 

விஜய் சினிமாவில் சிறந்த நடிகர் பிரிவில் கூட வரமாட்டார். கேரவனுள் கூட்டுப்புழுவாக வாழ்ந்த ஒருவர் திடீரென முதல்வராக ஆசைப்படுவது அவரின் விருப்பமாக இருந்தாலும், வாக்காளர்கள் யோசிக்க வேண்டும். ஷூட்டிங் முடிச்சிட்டு முதல்வராக வேண்டும் என நினைப்பது சரியா?. திமுக, அதிமுகவுக்கு மாற்றி மாற்றி வாக்களிக்காமல் மாற்றம் வேண்டும் என வாக்காளர்கள் நினைப்பது சரி. யார் வர வேண்டும், அவரால் என்ன மாதிரியான மாற்றம் கொண்டு வர முடியும் என்பதை வாக்காளர்களாகிய மக்கள் தாம் சிந்திக்க வேண்டும். 

இப்போது அரசியலைப் பார்த்தால் மாற்றம் தரும் தலைவராக சீமான் உள்ளார். அவருக்கு தான் மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் செய்வதால் அவரைப் பற்றிய புரிதல் இருக்கும். விஜய் பின்னால் சினிமா கவர்ச்சி மட்டுமே உள்ளது. சீமான் தனி ஆளாக தொடங்கியவர். கொள்கைகளை மட்டுமே வெளிப்படுத்தி இளைஞர்களை ஈர்த்தவர். மாற்றம் என்றால் சீமான் தான். விஜய் மாற்று கிடையாது. 

விஜய் அரசியல் களத்தில் 10 ஆண்டுகளாவது செயல்பட்டிருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகளாவது இருந்து ஒரு ஆட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். கமல்ஹாசனும் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலில் இருந்ததால் தாம் மக்கள் அவரை தேர்வு செய்யவில்லை” என ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.