மாற்றத்தை தேடி போனால் ஏமாற்றம் வந்து விடும் என திமுகவுக்கு ஆதரவாக நடிகை சொர்ணமால்யா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சினிமா, சீரியல் பிரபலங்கள் அனைவரும் தங்கள் விரும்பக்கூடிய கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை, சமூக வலைத்தளப்பதிவு மூலம் ஆதரவு திரட்டி வருகின்றனர். இது மிகப்பெரிய அளவில் அரசியல் கட்சிகளுக்கு கைகொடுக்கிறது.
நடிகை சொர்ணமால்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு மட்டுமல்ல, அம்பேத்கரின் பிறந்தநாளும் இதே தினம் தான். என்ன ஒரு அருமையான நாள். இன்னைக்கு காலையில் சில இளம் ஆய்வு மாணவர்களுடன் சேர்ந்து நான் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் முதல்வர் படைப்பகத்திற்கு சென்றேன். அதனைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடித்தது. என்ன ஒரு மாதிரியான அமைதியான சூழல் அங்கிருக்கிறது. முதல்வர் படைப்பகத்தில் படிக்கலாம், படைக்கலாம், கலந்தாலோசனை செய்யலாம்.
இதெல்லாம் பார்த்து விட்டு எனக்குள் சுதந்திரம் என்றால் என்ன என்று கேள்வி எழுந்தது. அதாவது நமக்கான தளத்தை கொடுப்பது தான் சுதந்திரம். அந்த தளமானது எந்தவிதமான திணிப்பு, கட்டாயம் என எதுவும் இல்லாமல் பயமில்லாமல் நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவதாகும். அந்த தளத்தை கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு நமக்கு கொடுத்திருக்கிறது. எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை. இந்தியாவில் மற்ற இடங்களைப் பார்க்கும்போது எவ்வளவு ஒரு அழுத்தமான சூழ்நிலையில் அனைவரும் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்.
தமிழ்நாட்டின் தொன்மையைப் பார்க்கும்போது நமக்கு பெருமையாக இருக்கிறது. ஆனால் அதனை பறைச்சாற்றவிடாமல் கட்டுப்படுத்தப்படுகிறது. நாம் தமிழ்நாட்டில் வாழ்வதால் சுதந்திரம் மேலும் மேலும் கட்டமைக்கப்படுகிறது. மரபு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அது மறுக்கப்படக்கூடாது.
View this post on Instagram
இன்னும் 9 நாட்களில் தமிழ்நாட்டின் வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான நேரம் வந்துள்ளது. இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் தேவை மாற்றமா என்றால் இல்லை. மாற்றத்தை தேடி போனால் ஏமாற்றம் வந்து விடும். நமக்கு இருக்கக்கூடிய முன்னேற்றத்தைப் பார்த்து மாற்றம் தேவையில்லை, முன்னேற்றம் தான் தேவை என நான் நினைக்கிறேன். சமூக நீதியை பின்பற்றி இருக்கக்கூடிய தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். இது என்னுடைய எண்ணமாகும்” என தெரிவித்துள்ளார்.