ரூ.8,000 கூப்பன் தகராறில் இளம்பெண் தற்கொலை - திமுக நிர்வாகிகள் 6 பேர் கைது!
Dinamaalai April 16, 2026 09:48 AM

திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், திமுக நிர்வாகிகளால் அவமானப்படுத்தப்பட்ட பட்டியலின இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய திமுக நிர்வாகிகள் 6 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மண்ணச்சநல்லூர் பகுதியில் திமுகவினர் தரப்பில் ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கூப்பன் தனக்கு ஏன் வழங்கப்படவில்லை என்று சிந்துஜா என்ற இளம்பெண் திமுக நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், திமுக நிர்வாகிகள் அந்தப் பெண்ணை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிந்துஜா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் பரவியதும், ஆத்திரமடைந்த சிந்துஜாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி திருச்சி - லால்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

பெண்ணின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகிகள் 6 பேரை போலீசார் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் தொடர்புடைய இத்தகைய மோதல் மற்றும் தற்கொலைச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.