முடங்கியது 'X' தளம்: உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்பு!
Webdunia Tamil April 17, 2026 09:48 PM

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'X' சமூக வலைதள தளம், இன்று காலை திடீரென முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களின் கணக்குகளை அணுக முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சேவை தடங்கல்களை கண்காணிக்கும் 'டௌன்டெக்டர்' தளத்தில், சுமார் 5,400-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, நியூயார்க் மற்றும் சியாட்டில் போன்ற நகரங்களில் வசிக்கும் பயனர்கள் இந்த பாதிப்பை அதிக அளவில் எதிர்கொண்டனர்.

சில பயனர்களுக்குச் சில நிமிடங்களிலேயே சேவை சீரான நிலையில், பலருக்கு செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. இந்த முடக்கத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து எலான் மஸ்க் தரப்பிலிருந்தோ அல்லது 'X' நிர்வாகத்திலிருந்தோ இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

பயனர்கள் சிலர் தங்கள் இணைய இணைப்பை சரிபார்ப்பது, செயலியை புதுப்பிப்பது அல்லது கேச் தரவுகளை அழிப்பது போன்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும், இது நிறுவனத்தின் சர்வர் பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்பதால், தனிப்பட்ட பயனர்களின் தீர்வுகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னரும் இதே போன்ற தொழில்நுட்ப கோளாறுகளை 'X' தளம் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.