வீட்டு முன்னாடி விசிலை கோலமா போடுங்க!.. வேறலெவலில் பிரச்சாரம் பண்ணும் விஜய்!..
Webdunia Tamil April 17, 2026 09:48 PM


நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பவர் விஜய். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக வருகிற ஏப்ரல் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது.. மற்ற கட்சிகளை போல் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது..

விஜய் அடிப்படையில் ஒரு நடிகராக இருப்பதாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும் அவர் செல்லும் இடமெங்கும் அவரை பார்ப்பதற்கு பொதுமக்கள் பலரும் கூடுவதாலும் இந்த சட்டமன்ற தேர்தலில் தவெக பெரிய தாக்கத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவர் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்குவார் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்..

ஒருபக்கம் பிரச்சாரத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் விஜய் பல தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். ஒருபக்கம் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தும் பிரச்சாரங்களை அவர் ரத்து செய்தும் வருகிறார். இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் தவெக வாக்குறுதி புத்தகத்தை அவர் வெளியிட்டார்.. அப்போது பேசிய விஜய் பல தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்தார்..

மேலும் ‘என் அம்மா, அக்கா, தங்கைகளுக்கு என்னுடைய கோரிக்கை.. நீங்கள் எல்லோரும் எனக்காக உங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும்.. அது எனக்கு நீங்க கொடுக்கிற பெரிய ஆதரவாக இருக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.

மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரணமாக தெரியும்.. ஆனால் விஜய் ரசிகைகளும், ஆதரவாளர்களும், தவெக நிர்வாகிகள் வீட்டின் முன்பும் இப்படி விசில் சின்னம் கோலமாக போடப்பட்டு அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலானால் அது தவெகவுக்கு பெரிய அளவிலான பிரச்சாரமாக மாறிவிடும் என விஜய் நம்புகிறார்.

அவர் சொன்னதை மக்கள் செய்வார்களா? அது விஜய்க்கு பெரிய ஆதரவாக அமையுமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.


© Copyright @2026 LIDEA. All Rights Reserved.