மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறையை முன்னெடுக்கும் நோக்கில் கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.
அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால், இந்த மசோதா முறைப்படி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த மசோதாவிற்கு ஆதரவாக மொத்தம் 298 வாக்குகள் பதிவாகின. மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் 230 வாக்குகள் விழுந்தன.சாதாரண சட்டங்களுக்கு வெறும் பெரும்பான்மை போதுமானது என்றாலும், அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைப் பொறுத்தவரை அவைக்கு வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) ஆதரவு கட்டாயம். அந்த கணக்குப்படி பார்த்தால் வாக்கெடுப்பில் பங்கேற்ற 528 உறுப்பினர்களில், மசோதா வெற்றி பெற குறைந்தபட்சம் 326 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், அரசுக்கு 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் மசோதா தோல்வியில் முடிந்தது.
வாக்கெடுப்பின் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் 298உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.எதிர்க்கட்சியான 'இந்திய கூட்டணி ஓரணியில் திரண்டு 230 வாக்குகளை எதிராகப் பதிவு செய்தது.
தொகுதி மறுவரையை தொடர்புடைய 131-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவும் இன்று மக்களவையில் தோல்வியடைந்தது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரை திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தொகுதி மறுவரை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், இந்த மசோதாக்கள் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.